கோலாலம்பூர், நவ 11 : முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வீட்டுக் காவலுக்கான அமலாக்க நடைமுறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைப் பொதுமன்னிப்பு உத்தரவு மற்றும் விடுதலை உத்தரவு (Order of Discharge) ஆகியவற்றின் சட்டரீதியான விளைவுகள் குறித்த விளக்கமும் ஆய்வும் முடிவுறும் வரையில் , வீட்டுக் காவல் நடைமுறை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக, தேசிய சட்டத் துறை தெரிவித்தது.
இந்த தற்காலிக ஒத்தி வைப்பின் போது, சம்பந்தப்பட்ட அதிகாரத்துவ தரப்பின் உத்தரவிற்கு ஏற்ப, நஜீப் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்திலேயே தொடர்ந்து இருப்பார் என அத்துறை விளக்கியது.
இந்த தற்காலிக ஒத்தி வைப்பு, பேரரசரின் உத்தரவை மீறுவது என்றாகாது. மாறாக, பேரரசரின் உத்தரவும், நீதிமன்றத்தின் உத்தரவும் சட்ட ரீதியாக முறைப்படி செயல்படுத்தப்படுவதை உறுதிச் செய்வதற்காகவே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய சட்டத் துறை ஓர் அறிக்கையின் வாயிலாக தெளிப்படுத்தியது.
நஜிப் தனது மீதமுள்ள சிறைத்தண்டனையை 23 ஆகஸ்ட் 2028 வரை வீட்டுக்காவலில் அனுபவிப்பதற்காக, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இவ்வாண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி வழங்கப்பட்ட நிபந்தனைப் பொது மன்னிப்பு உத்தரவை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக தேசிய சட்டத் துறை தெரிவித்தது.
எனினும்,அந்த உத்தரவு அவர் 5 கோடி ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்துவதற்கும், விதிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்றுவதற்கும் உட்பட்டதாகும்.
எஸ்சிஆர் இன்டர்நேஷனல் (SRC International) வழக்கில், " 5 கோடி ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தினால் 23 ஆகஸ்ட் 2028 வரை மீதமுள்ள தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்கலாம்" என்ற சட்டப்பூர்வ விளக்கம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து சட்ட ரீதியான கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த 5 கோடி ரிங்கிட் அபராதத் தொகை செலுத்தப்பட்டது, தண்டனையின் அபராதப் பகுதியை மட்டுமே நிறைவு செய்கிறதா அல்லது மீதமுள்ள சிறைத்தண்டனையையும் சேர்த்து முடிவுக்குக் கொண்டு வருகிறதா என்பதைத் தீர்மானிக்க கூடுதல் சட்ட ஆய்வுகள் தேவைப்படுவதாக தேசிய சட்டத் துறை குறிப்பிட்டது.
"முதல் விளக்கத்தின்படி, வீட்டுக்காவல் என்பது சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்கான ஒரு மாற்று முறையே அல்லது இடமே தவிர, சிறைத்தண்டனையை முழுமையாக ரத்து செய்வது அல்ல," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு விளக்கத்தின்படி, 5 கோடி ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்தியது பொதுமன்னிப்பு முழுமையாகப் பலன் தருவதற்கான ஒரு நிபந்தனையாகும். இதன் மூலம், எஸ்சிஆர் இன்டர்நேஷனல் வழக்கின் சிறைத்தண்டனை உள்ளிட்ட ஒட்டுமொத்த தண்டனைகளும் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்படும்.
தேசிய சட்டத்துறை அலுவலகத்தின்படி, இந்த குழப்பமானது இன்று (6 நவம்பர் 2026) பிறப்பிக்கப்பட்ட 'அபராதக் கட்டண விடுதலை உத்தரவின்' (Perintah Pelepasan Pembayaran Denda) சட்டரீதியான தாக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது.
ஏனெனில், இந்த உத்தரவு அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடும் அதே வேளையில், மீதமுள்ள தண்டனையை 23 ஆகஸ்ட் 2028 வரை வீட்டுக்காவலில் கழிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.
அதுமட்டுமின்றி, எஸ்சிஆர் வழக்கின் சிறைத்தண்டனை நிலைப்பாடு, நஜிப்பின் 1எம்டிபி (1MDB) வழக்கின் சிறைத்தண்டனை அமலாக்கத்திலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஏனெனில், 14 அக்டோபர் 2026 அன்று 1எம்டிபி வழக்கின் தண்டனையை நிறுத்தி வைக்கும் விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, எஸ்சிஆர் இன்டர்நேஷனல் வழக்கின் தண்டனை முடிந்த பின்னரே 1எம்டிபி வழக்கின் தண்டனை தொடங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
" இந்த சிக்கல்கள் மிகவும் சிக்கலான சட்டக் கேள்விகளை உள்ளடக்கியுள்ளதாலும், பேரரசரின் பொதுமன்னிப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாலும், இதுவரை இல்லாத ஒரு புதிய சட்டச் சூழலாக இது இருப்பதாலும், அடுத்தகட்ட அமலாக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் தெளிவான மற்றும் இறுதியான சட்ட விளக்கம் பெறப்பட வேண்டும் என்று தேசிய சட்டத் துறை கருதுகிறது," என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, எஸ்சிஆர் இன்டர்நேஷனல் நிதி மோசடி வழக்கில் நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 5 கோடி ரிங்கிட் அபராதத் தொகையை அவரது தரப்பு இன்று உயர் நீதிமன்றக் குற்றப் பதிவு அலுவலகத்தில் முழுமையாகச் செலுத்தியது.







