சிலாங்கூர் வெள்ளம்: கேனால் சிட்டி திட்டம் ரத்தானதே காரணமா? கீர் தோயோ கருத்தை சாடிய AMK

6 நவம்பர் 2026, 6:52 AM
சிலாங்கூர் வெள்ளம்: கேனால் சிட்டி திட்டம் ரத்தானதே காரணமா? கீர் தோயோ கருத்தை சாடிய AMK

ஷா ஆலாம், நவ.6 – ஷா ஆலாமில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு கேனால் சிட்டி (Canal City) திட்டம் ரத்து செய்யப்பட்டதே காரணம் என சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் முகமட் கீர் தோயோ தெரிவித்த கருத்துக்கு, பிகேஆரின் இளைஞர் பிரிவான `AMK Malaysia` கேள்வி எழுப்பியுள்ளது.

கேனால் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கைத் தடுத்திருக்க முடியும் என்ற கூற்றை, முறையான தொழில்நுட்ப மதிப்பீடுகள் இல்லாமல் உண்மையாக ஏற்றுக்கொள்ள முடியாது என AMK தெரிவித்தது.

மேலும், அத்திட்டம் ரத்து செய்யப்பட்டபோது சிலாங்கூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையின் (JPS) ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளும் கருத்தில் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய மழை, ஆறுகளின் நீரைக் கடத்தும் கொள்ளளவு, சுற்றுப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கடல் அலையின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலேயே வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், சிலாங்கூர் அரசு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காகக் கூடுதலாக 70 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாக AMK தெரிவித்துள்ளது. மொத்தம் 255 உடனடி வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நவம்பர் 4-ஆம் தேதி நிலவரப்படி அவற்றில் 177 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

மேலும், 4 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்பில் 160-க்கும் மேற்பட்ட வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனுடன், சுங்கை பூலோ மற்றும் சுங்கை டாமான்சாரா ஆறுகளை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 700 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளை வரவேற்றுள்ள AMK, பெரிய அளவிலான வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் நிறைவடையும் வரை காத்திருக்காமல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குறுகியகால வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.

தொடர்ச்சியான வெள்ளத்தால் பாதிக்கப்படும் குடியிருப்பாளர்களின் அச்சம் மற்றும் மன உளைச்சலைக் கருத்தில் கொண்டு, அரசியல் விவாதங்கள் மற்றும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளைக் காட்டிலும் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் AMK வலியுறுத்தியுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.