பண்டார் உத்தாமா மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மாணவன் தரப்பு விசாரணை நிறைவு

26 ஆகஸ்ட் 2026, 9:23 AM
பண்டார் உத்தாமா மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மாணவன் தரப்பு விசாரணை நிறைவு

ஷா ஆலம், ஆகஸ்ட் 26 — பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் 16 வயது மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது மாணவனின் தரப்பு இன்று தனது வாதத்தை நிறைவு செய்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி அட்லின் அப்துல் மஜிட், அரசுத் தரப்பும் தற்காப்புத் தரப்பும் தங்களது பதில் வாதங்களை செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இரு தரப்பினரின் வாய்மொழி இறுதி வாதங்கள் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி நிர்ணயித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி காலை 9.20 மணி முதல் 9.35 மணிக்குள் பண்டார் உத்தாமாவில் உள்ள இடைநிலைப் பள்ளியின் பெண்கள் கழிவறையில் மாணவியை கொலை செய்ததாக மாணவன் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இப்பிரிவு மரண தண்டனைக்கு வகை செய்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் 18 வயதுக்குக் குறைவானவர் என்பதால், அவருக்கான தண்டனை தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் விதிமுறைகள் பொருந்தும்.

இதனிடையே, 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 97(1) பிரிவின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் 18 வயதுக்குக் குறைவான குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க முடியாது.

அதற்குப் பதிலாக, அதே சட்டத்தின் 97(2) பிரிவின் கீழ், குற்றவாளியை குறிப்பிட்ட காலத்திற்கு தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட முடியும்.

அந்தக் கால அளவை யாங் டி-பெர்துவான் அகோங், சம்பந்தப்பட்ட ஆட்சியாளர் அல்லது யாங் டி-பெர்துவா நெகிரி ஆகியோர் நிர்ணயிப்பர்.

செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள இரு தரப்பினரின் இறுதி வாய்மொழி வாதங்களைத் தொடர்ந்து, இவ்வழக்கில் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.