ஷா ஆலாம், நவ.6 – கோலா சிலாங்கூர், சௌஜானா உத்தாமா பகுதியில் உள்ள தாமான் செரி ஆலாமில் நீர்த்தேக்கக் குளம் நிரம்பி வழிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெய்த கனமழையால் நீர்த்தேக்கக் குளத்தின் கொள்ளளவு அதிகரித்து, நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததாக சௌஜானா உத்தாமா குடியிருப்பாளர்கள் பிரதிநிதி மன்றத்தின் (MPP) உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக் குழுத் தலைவர் வான் இஸ்மாயில் ஹாஷிம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் நீர்த்தேக்கக் குளத்தின் கரை உடையவில்லை என்றும், அதிகப்படியான மழைநீரைத் தேக்கி வைக்க முடியாமல் குளம் நிரம்பி வழிந்ததே வெள்ளத்திற்குக் காரணம் என்றும் அவர் விளக்கினார். சில பகுதிகளில் முழங்கால் அளவுக்கும், பெரும்பாலான பாதிக்கப்பட்ட வீடுகளில் சுமார் 0.3 மீட்டர் உயரத்திற்கும் வெள்ளநீர் புகுந்ததாகக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சௌஜானா பெர்டானா பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக SU4 மண்டலத்தில் உள்ள வீடுகளின் முன்புறத் தாழ்வாரங்கள் வரை வெள்ளநீர் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், எக்கோ கிராண்டியர் எல்லைக்கு அருகிலுள்ள வடிகால் கரையும் உடைந்துள்ளது.
நீர்த்தேக்கக் குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதுடன், ஆற்றின் நீர்மட்டமும் உயர்ந்திருப்பதால் மழைநீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வான் இஸ்மாயில் தெரிவித்தார். இதனால் வெள்ளநீர் விரைவாக வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோலா சிலாங்கூர் ஊராட்சி மன்றம் (MPKS) தாமான் செரி ஆலாமிலும் சௌஜானா பெர்டானாவிலும் தலா ஒரு நீர் இறைப்பானை நிறுவியுள்ளது. இவை தற்போது செயல்பாட்டில் உள்ளன.
மேலும், சுற்றுப்புறங்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் வடிகால் கட்டமைப்புகளின் முறையான பராமரிப்பின்மையும் வெள்ளப்பெருக்குக்குக் காரணமாக இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், வெள்ள நிலவரத்தைக் கோலா சிலாங்கூர் ஊராட்சி மன்றம், காவல்துறை, மாவட்ட அலுவலகம் மற்றும் குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகள் இணைந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்தால் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், ஹில்பார்க் பகுதியில் உள்ள இக்சோரா மண்டபத்தில் தற்காலிக நிவாரண மையத்தை (PPS) திறக்க மாவட்ட அதிகாரிகள் தயாராக இருப்பதாக வான் இஸ்மாயில் தெரிவித்தார்.







