பட்ஜெட் 2027: மக்களுக்கான உதவிகள் தொடரும் – பிரதமர் அன்வார்

19 அக்டோபர் 2026, 10:00 AM
பட்ஜெட் 2027: மக்களுக்கான உதவிகள் தொடரும் – பிரதமர் அன்வார்

புத்ராஜெயா, அக். 19 – உலகளவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் வாழ்க்கைச் செலவின அழுத்தங்கள் உயர்ந்துள்ள போதிலும், நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதுடன் மக்களுக்கான உதவிகளையும் தொடர்ந்து வழங்கும் ஆற்றல் அரசிடம் இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த உறுதிப்பாடு, ரஹ்மா ரொக்க உதவி (STR) மற்றும் ரஹ்மா அடிப்படை உதவி (SARA) ஆகிய திட்டங்களின் ஒதுக்கீடுகள் மூலம் வெளிப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தாம் நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது இந்த உதவிகளுக்கான ஒதுக்கீடு RM8 பில்லியனாக இருந்த நிலையில், தற்போது அது RM15 பில்லியனாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக அன்வார் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார வளர்ச்சியால் கிடைக்கும் பலன்கள் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றடைவதை உறுதிசெய்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற நிதி அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றியபோது, வரவுசெலவுத் திட்டம் குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், அதன் விவரங்களையும் புள்ளிவிவரங்களையும் முழுமையாகப் புரிந்துகொண்டால் உண்மை நிலவரம் தெளிவாகும் எனக் குறிப்பிட்டார்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் சூழலிலும், மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் எரிபொருள் மானியங்களும் தொடர்ந்து வழங்கப்படுவதாகப் பிரதமர் கூறினார்.

RON95 பெட்ரோலின் விலையை லிட்டருக்கு RM1.99 என்ற அளவில் நிலைநிறுத்துவதற்காக, ஆண்டுக்கு சுமார் RM40 பில்லியன் எரிபொருள் மானியத்திற்காகச் செலவிடப்படுகிறது.

இதற்கிடையில், சுமார் 12 ஆண்டுகளாகச் சம்பள உயர்வு இல்லாத நிலையில், அரசாங்க ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்காகக் கூடுதலாக RM18 பில்லியன் ஒதுக்க வேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களின் சேவைக்கு நியாயமான ஊதியம் வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனக் குறிப்பிட்ட பிரதமர், அதற்குப் பதிலாக அவர்கள் பொதுச் சேவையின் தரத்தை உயர்த்துவதுடன், நிதி கசிவுகளைத் தடுப்பதிலும் ஊழலை நிராகரிப்பதிலும் உறுதியுடன் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் கிக் துறையினரின் தேவைகளுக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அரசு வழங்கும் உதவிகள் மக்களின் வருமானத்திற்கோ சம்பளத்திற்கோ மாற்றாகக் கருதப்படக் கூடாது என்றும், மாறாக அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்க வழங்கப்படும் கூடுதல் ஆதரவாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

மேலும், ஒவ்வொரு டாக்சி ஓட்டுநருக்கும் RM1,000 உதவி வழங்கும் திட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய வாகனப் பதிவெண்கள் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து இந்த உதவி நிதியளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், மாநிலங்களுக்கு இடையிலான வளர்ச்சி வேறுபாடுகளைக் குறைத்து, அரசு வளங்கள் சமநிலையுடன் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

குறைந்த வருவாய் ஈட்டும் மாநிலங்களிலும் வறுமையைக் கையாளுதல், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற தேவைகளுக்குப் போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.