கோலாலம்பூர், செப். 2: RON97, மானியம் வழங்கப்படாத RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை இன்று முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை லிட்டருக்கு 5 சென் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் RON97 பெட்ரோல் லிட்டருக்கு RM4.25, மானியம் வழங்கப்படாத RON95 பெட்ரோல் RM3.77, டீசல் RM4.67 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.
அதேவேளையில், மானியம் வழங்கப்படும் எரிபொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், உலகளாவிய விலை உயர்வின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் மற்றும் வர்த்தகத் துறையைப் பாதுகாக்கும் நோக்கில் BUDI95, BUDI Diesel, SKPS மற்றும் SKDS போன்ற இலக்குப்படுத்தப்பட்ட மானியத் திட்டங்களை மடாணி அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தும் என்று நிதி அமைச்சு உறுதியளித்துள்ளது.
அத்துடன், பொதுமக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதோடு தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் தேசிய எரிபொருள் விநியோகம் மற்றும் மானியச் செலவினங்களின் அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்றும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.





