ஷா ஆலாம், நவ 5: 2027 புதிய பள்ளிப் பாடத்திட்டத்தின் கீழ், தேசியப் பள்ளிகளில் மலாய் மொழிக்கும், சீனத் தேசிய வகை பள்ளிகளில் சீன மொழிக்கும், தமிழ் தேசிய வகை பள்ளிகளில் தமிழ் மொழிக்கும் வாரத்திற்கு தலா 12 கற்பித்தல் பாடவேளைகளை, அப்படியே தக்க வைத்துக் கொள்ள கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் மொழி கற்பித்தல் பாடவேளைகளின் ஒதுக்கீடு குறித்து, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.
"இக்கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட கருத்துகளையும் பரிந்துரைகளையும் கவனத்தில் கொண்டு, விரிவான பரிசீலனை மற்றும் விவாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டது.
இம்முடிவின் மூலம், இந்த மொழிகளுக்கான கற்பித்தல் பாடவேளைகளின் நேர ஒதுக்கீடு குறைக்கப்படாது என்பது உறுதி செய்யப்படுகிறது," என்று அமைச்சு வியாழக்கிழமை (நவம்பர் 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
விவாதங்களின் போது தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் கல்வி அமைச்சு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
நாட்டின் கல்விப் பாடத்திட்ட சீர்திருத்த முயற்சிகளில், அனைத்து பள்ளி நீரோட்டங்களிலும் உள்ள மாணவர்களின் மொழித்திறன் மற்றும் கற்றல் தேவைகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.







