சிலாங்கூரில் 87 தமிழ்ப்பள்ளிகளுக்கு RM30,000 முதல் RM120,000 வரை நிதியுதவி

4 நவம்பர் 2026, 10:45 AM
சிலாங்கூரில் 87 தமிழ்ப்பள்ளிகளுக்கு RM30,000 முதல் RM120,000 வரை நிதியுதவி

ஷா ஆலாம், நவ.4: சிலாங்கூரில் தகுதிபெற்ற 87 தமிழ்ப்பள்ளிகளுக்கு (SJKT) தலா RM30,000 முதல் RM120,000 வரை நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரின் 2026-ஆம் ஆண்டு பள்ளிகளுக்கான உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்நிதி, தமிழ்ப்பள்ளிகளின் கல்வி வளர்ச்சியை வலுப்படுத்துவதுடன், கற்றல் தரத்தையும் பள்ளிகளின் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படும் நிதியில் 50% பாடத்திட்ட மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்துவதற்கும், மீதமுள்ள 50% பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும் என பாப்பாராய்டு தெரிவித்தார்.

இந்த நிதிப் பகிர்வு மூலம் மாணவர்களின் கற்றல் தரம், திறன்கள் மேம்படுவதுடன், பள்ளிகளின் வசதிகளும் சுற்றுச்சூழலும் மேம்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்த நிதியுதவிக்கான அதிகாரப்பூர்வக் கடிதங்கள் வரும் நவம்பர் 14-ஆம் தேதி கிள்ளான் டத்தாரான் கிள்ளான்@படாங் செட்டி வளாகத்தில் நடைபெறவுள்ள சிலாங்கூர் அரசின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியின்போது வழங்கப்படவுள்ளன.

இனம், மதம் மற்றும் பின்னணி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் கல்வித் துறைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளதாக பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

அதேவேளையில், ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி, சிறந்த பள்ளி வசதிகள் மற்றும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.