ஷா ஆலம், நவ 5 : கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் சிலாங்கூர் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய உணவு விநியோகிப்பாளராக உருவெடுக்கும் ஆற்றலை, சபாக் பெர்னாம் பகுதி கொண்டுள்ளது.
நெல், அரிசி, காய்கறி உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆகியவற்றில் சபாக் பெர்னாம் சிறந்து விளங்குவதால், அது சிலாங்கூரின் முதன்மை உணவுக் களஞ்சியமாகத் திகழ்கிறது என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மலேசியா ஆண்டுதோறும் 60 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிக மதிப்புள்ள உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது.
நாட்டின் மக்கள் தொகை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் சிலாங்கூர் மாநிலம் இதில் 20 முதல் 30 விழுக்காடு பங்களிப்பைக் கொண்டுள்ளது.
மேலும், இந்த இறக்குமதிப் பொருட்களில் சுமார் 80 விழுக்காடு கிள்ளான் துறைமுகம் வழியாகவே நாட்டிற்குள் நுழைகிறது என்று மந்திரி பெசார் அண்மைய 'சப்தா' பொட்காஸ்ட் ( SABDA Podcast) நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
நீண்ட காலத்திற்குத் தேவையான உணவு கையிருப்பை உறுதிச் செய்வதற்காக, மாநில அரசாங்கம் SABDA எனப்படும் சபாக் பெர்னாம் மேம்பாட்டு பகுதி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இந்த சபாக் பெர்னாம் மேம்பாட்டு திட்டம் விவசாயத்துடன் மட்டும் நின்றுவிடாமல், மீன்பிடித் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உதாரணமாக, செகிஞ்சான் பகுதியில் வெறும் படகுத் துறைகளை அமைப்பதுடன் நிறுத்தாமல், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் பதப்படுத்தும் ஆலைகள் உள்ளிட்ட முழுமையான மீன்பிடி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய நவீன அமைப்புகளின் மூலம் உள்ளூர் உற்பத்தித் திறனைக் கணக்கிட்டு, இன்னும் எவ்வளவு விழுக்காடு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதை மாநில அரசால் துல்லியமாகத் தீர்மானிக்க முடியும்.
இதன் மூலம் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் மக்களுக்குத் தேவையான உணவை உள்ளூரிலேயே வழங்கி, இறக்குமதியை நம்பியிருப்பதை 10 முதல் 20 விழுக்காடு வரை குறைக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
இந்த இலக்கை அடைவதற்காக, 'ஸ்பீட் சிலாங்கூர்' (Speed Selangor) என்ற விரைவான ஒப்புதல் செயல்முறை மூலம் தனியார் முதலீடுகளும் பெருமளவில் ஊக்குவிக்கப்படுகின்றன.
முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) கீழ் உள்ளூர் பொருளாதாரத்தை, குறிப்பாக விவாசயம், தொழில்முனைவோர் மற்றும் சமூக கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட மூன்று முக்கிய பொருளாதார பகுதிகளில் சபாக் பெர்னாம் மேம்பாட்டு திட்டமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.









