ஷா ஆலாம், ஜூலை 29 — சபாக் பெர்ணம் மாவட்ட மன்றத்தின் (MDSB) சார்பில் மேற்கொள்ளப்பட்ட 'Ops Bersih Premis Makanan' சோதனையின்போது, நிர்ணயிக்கப்பட்ட சுகாதாரத் தரங்களைப் பூர்த்தி செய்யத் தவறிய சுங்கை பெசார் பகுதியில் உள்ள இரண்டு உணவகங்கள் 14 நாட்களுக்கு மூடப்படுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளன.
இந்த அதிரடிச் சோதனையின்போது மொத்தம் ஆறு உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுகளில் விதிமுறைகளை மீறியதற்காக ஐந்து சம்மன்களும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகச் சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் தெரிவித்துள்ளது.
உணவகங்கள் (சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம்) துணைச் சட்டம் 2007-ன் கீழ் இந்த அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனைத்து உணவகங்களும் தூய்மையான சூழலில் இயங்குவதை உறுதி செய்வதே இந்த அமலாக்க நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக் காப்பதற்காக உணவகங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதிலும் ஆய்வுகள் மேற்கொள்வதிலும் மாவட்ட மன்றம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில், சுகாதாரமற்ற முறையிலோ அல்லது பாதுகாப்பற்ற நிலையிலோ இயங்கும் எந்தவொரு உணவகம் குறித்தும் பொதுமக்கள் உடனடியாகச் சபாக் பெர்ணம் மாவட்ட மன்றத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.









