ஷா ஆலாம், அக் 30 : சிலாங்கூர், சபாக் பெர்னாமில் உள்ள 'பான் கால்வாய்' (Ban Canal) பகுதி, ஆண்டு முழுவதும் பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு சூழலியல் சுற்றுலா தலமாக மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அப்பகுதி தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கும், உள்ளூர் மக்களுக்குப் பயனளிப்பதற்கும் ஏதுவாக, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப்படுமென, சிலாங்கூர் மந்திரி பெசார் கழக (MBI), குழுமத்தின் தலைமைச் செயல் முறை அதிகாரி டத்தோ டிஎஸ். சைபுல்யாசான் எம்.யூசோப் தெரிவித்தார்.
"மக்கள் வருடத்தில் ஒருமுறை மட்டுமே காத்திருந்து மகிழ்வதைத் தவிர்த்து, எப்போதும் வந்து ரசிக்கும்படியான ஒரு நிரந்தர உள்கட்டமைப்பு வசதி கொண்ட இடமாக இதனை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.
சிறந்த உள்கட்டமைப்புடன், மாசுக் கட்டுப்பாடு போன்றவற்றையும் எங்களால் கண்காணிக்க முடியும்," என்று மீடியா சிலாங்கூர் தயாரிப்பிலான 'பிசாரா செமாசா' (Bicara Semasa) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் தெரிவித்தார்.

பான் கால்வாய் பகுதியின் மேம்பாடு, உள்ளூர் வியாபாரிகளுக்கு அதிக பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதோடு, கேனோயிங் (Canoe) சங்கங்கள் உள்ளிட்ட நீர் விளையாட்டு வீரர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
"2022-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் 'பான் கால்வாய் விழா'-விற்கு (Karnival Ban Canal) கிடைத்து வரும் அமோக வரவேற்பை அடுத்து, சபாக் பெர்னாமில், வணிக - முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
உணவுத் தயாரிப்பு , உணவுப் பாதுகாப்பு போன்ற வணிகங்களைத் தொடங்க பலர் ஏற்கனவே MBI-ஐத் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த வளர்ச்சி, சிலாங்கூரின் வடக்குப் பகுதியின் பொருளாதாரத் திறனை மேம்படுத்துவதோடு, மாவட்டங்களுக்கு இடையிலான பொருளாதார வளர்ச்சியைச் சமநிலைப்படுத்துவதற்கான 'இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின்' (RS-2) இலக்குகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது என்றும் சைபுல்யாசான் கூறினார்.
அடுத்த ஆண்டு விழாவை நடத்துவது உட்பட, பான் கால்வாயில் தடையற்ற வசதிகளை வழங்குவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
இவ்வேளையில், 2026-ஆம் ஆண்டிற்கான பான் கால்வாய் விழா வரும் நவம்பர் 6 முதல் 8 வரை சபாக் பெர்னாம், சிம்பாங் லீமா, பாரிட் 14-இல் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்கு குறைந்தது 38,000 பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.









