ஷா ஆலாம், செப் 5 : சபாக் பெர்னாம் பகுதியில் வெள்ள ஆபத்துள்ள இடங்களில், 65 லட்சம் ரிங்கிட் செலவில் 15 உடனடி வெள்ள நிவாரணத் திட்டங்களை செயல்படுத்த உத்தேசிப்பட்டுள்ளது.
சபாக் பெர்னாம் வெள்ள நிவாரணத் திட்டம் தொடர்பில் நீர்ப்பாசன வடிகால் துறையுடன் இணைந்து விரிவாக ஆராயப்பட்டதாக, உட்கட்டமைப்புத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.
"கம்புங் நெலாயான் சுங்கை பெசார், கம்பங் பெலியா 2, கிமீ 33 ஜாலான் சுங்கை பாஞ்சாங், கே.டி.ஆர் ரிம்பா (KDR Rimba) மற்றும் செகிஞ்சான், செபிந்தாஸ் ஆகிய பகுதிகளில் உள்ள சில இடங்கள் உட்பட 11 வெள்ள அபாயப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன" என்று அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட இடங்களில் நடமாடும் பம்ப் நிலையங்களை அமைப்பது, கரைகளைப் புனரமைப்பது மற்றும் கடற்கரைத் தடுப்புகளை வலுப்படுத்துவது போன்றவை முன்மொழியப்பட்ட உடனடித் திட்டங்களில் அடங்கும் என்றார்.
நீண்ட காலத் தீர்வுக்காக, பாஞ்சாங் பெடேனா (Panchang Bedena) நீர்ப்பாசனப் பகுதியில் 10.22 மில்லியன் ரிங்கிட் செலவில் 'பம்ப் ஹவுஸ்' (pump house) அமைக்கும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டது.
இவற்றுடன், இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண 15 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுங்கை பெர்னாம் வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் 3-ஆம் கட்டமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இஷாம் தெரிவித்தார்.







