வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விவகாரத்தில் எம். சரவணன் மீது RM1.097 மில்லியன் லஞ்சக் குற்றச்சாட்டு

28 ஆகஸ்ட் 2026, 2:58 AM
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விவகாரத்தில் எம். சரவணன் மீது RM1.097 மில்லியன் லஞ்சக் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28: முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மீது RM1.097 மில்லியன் லஞ்சக் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

ஒரு நிறுவனத்துக்கான 1,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஒதுக்கீட்டு அனுமதி தொடர்பாக மொத்தம் RM1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளில் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

58 வயதான சரவணன், மலேசிய இந்திய காங்கிரஸ், MIC கட்சியின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

அந்த மூன்று குற்றச்சாட்டுகளும் நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம். சரவணன் அவற்றை மறுத்தார்.

முதல் மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளின்படி, Vectica Resources Sdn Bhd நிறுவனத்தின் இயக்குநரான 65 வயது தான் டெக் லிம் என்பவரிடமிருந்து, 38 வயது சையட் அமிருல் சையட் அஹ்மாட் மூலமாக முறையே RM150,000 மற்றும் RM350,000 ரொக்கப் பணத்தை சரவணன் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பணம், சரவணன் மனிதவள அமைச்சராக இருந்தபோது TYKB Engineering Sdn Bhd நிறுவனத்துக்கு 1,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்குவதற்கான வெகுமதியாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முதல் தொகையான RM150,000 கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி புக்கிட் ஜாலில் கோல்ஃப் அண்ட் கன்ட்ரி ரிசார்ட்ஸிலும், இரண்டாவது தொகையான RM350,000 அதே ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பங்சாரின் ஜாலான் தெலாவி 3 பகுதியிலும் பெறப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது குற்றச்சாட்டில், அதே நபரிடமிருந்து சையட் அமிருல் சையட் அஹ்மாட் மூலம் RM597,000 மதிப்பிலான தொகையை சரவணன் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சரவணன் மீது சுமத்தப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுகளும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் பிரிவு 16(a)(B)-ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதே சட்டத்தின் பிரிவு 24(1)-ன் கீழ் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், லஞ்சத் தொகையின் குறைந்தது ஐந்து மடங்கு அல்லது RM10,000, இதில் எது அதிகமோ அந்தத் தொகைக்கு குறையாத அபராதமும் விதிக்கப்படலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.