ஷா ஆலாம், ஆகஸ்ட் 17 — கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலை 2 - இல் (LPT2) வாகனமோட்டிகள் செய்த போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க சுமார் RM14,000 லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் இரு ரோந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், 30 வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய ஆண் போலீஸ் உறுப்பினர் ஒருவர் பகாங் SPRM அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டடுள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், அந்த சந்தேக நபர் ஜனவரி முதல் ஜூலை 2026 வரையிலான காலகட்டத்தில் மற்றொரு ரோந்து போலீஸ் அதிகாரியுடன் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், லஞ்சப் பணம் சந்தேக நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் மூன்றாம் தரப்பினரின் வங்கிக் கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருப்பதை SPRM பகாங் இயக்குநர் முகமட் ஷுகோர் மஹ்மூட் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கு 2009ஆம் ஆண்டு SPRM சட்டத்தின் 17(a) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.







