கோலாலம்பூர், நவ.4 – இன்று அதிகாலை திடீர் வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையின் (NKVE) ஷா ஆலாம் – செத்தியா ஆலாம் இடையிலான இருவழிப் பாதைகளும் தற்போது அனைத்து வாகனங்களின் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
NKVE நெடுஞ்சாலையின் 8.7-ஆவது கிலோமீட்டர் முதல் 9.3-ஆவது கிலோமீட்டர் வரையிலான பகுதிகளில் இரு திசைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
வெள்ளநீர் வடிந்து, போக்குவரத்து சீராக இருக்கும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக PLUS மலேசியா பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சாலை மூடப்பட்டிருந்தபோது, சுபாங் பகுதியிலிருந்து ஷா ஆலாம் நோக்கிச் சென்ற வாகனங்கள் ELITE விரைவுச்சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டன.
அதேபோல், புக்கிட் ராஜாவிலிருந்து சுபாங் நோக்கிச் சென்ற வாகனங்கள் செத்தியா ஆலாம் சந்திப்பு வழியாக வெளியேற்றப்பட்டதுடன், செத்தியா ஆலாம் பகுதியிலிருந்து வந்த வாகனங்கள் புக்கிட் ராஜா நோக்கித் திருப்பிவிடப்பட்டன.
இதற்கிடையில், நெடுஞ்சாலைப் பயனர்கள் வானிலை நிலவரம், வெள்ளப் பாதிப்புகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த அண்மைய தகவல்களை PLUS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் தகவல் தளங்கள் மூலம் அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதற்காக X தளத்தில் உள்ள @PLUSTrafik கணக்கு, PLUS செயலி, மின்னணு தகவல் அறிவிப்புப் பலகைகள் (VMS), PUTRI மெய்நிகர் உதவி மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தலாம்.
மேலும், நெடுஞ்சாலையில் அவசர உதவி தேவைப்படும் வாகனமோட்டிகள் PLUSLine 1-800-88-0000 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.








