ஷா ஆலாம், அக். 10 – அலாம் பூடிமான் பகுதியில் நேற்று மாலை 11 வாகனங்கள் மீது மோதிய விபத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுநர், போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்தது.
51 வயதுடைய அந்த ஆடவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் ஆம்பெட்டமைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் வகை போதைப்பொருள்கள் பயன்பாடு இருப்பது கண்டறியப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி சருடின் சமா தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர், தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987இன் பிரிவு 44(1A)(a)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
அந்த ஓட்டுநர் இன்று ஷா ஆலம் நீதிமன்றத்தில் தடுப்புக் காவலுக்காக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், நேற்று மாலை சுமார் 4.20 மணியளவில் புஞ்சாக் பெர்டானாவிலிருந்து புஞ்சாக் ஆலம் நோக்கிய பாதையில் லாரியின் பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதாக ஓட்டுநர் கூறியுள்ளார். இதனால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக அவர் தெரிவித்ததாக சருடின் கூறினார்.
பின்னர், கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்ப்புறச் சாலைக்குள் புகுந்து, அலாம் பூடிமான் மும்முனைச் சந்திப்பில் போக்குவரத்து விளக்குக்காகக் காத்திருந்த 11 வாகனங்கள் மீது மோதியது.
இந்த விபத்தில், 58 வயது ஆடவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் புஞ்சாக் ஆலாம் UiTM மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிவப்பு மண்டலத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதே வாகனத்தில் பயணித்த அவரது 53 வயது மனைவியும், 17 வயதுடைய பேரனும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெரோடுவா மைவி காரை ஓட்டிச் சென்ற 29 வயது ஆடவர் ஒருவரும் இவ்விபத்தில் காயமடைந்தார். அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவரும் சீரான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள தகவல்களை விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் அப்துல் நாசர் பெப்பிங்கிடம் 012-286 3875 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவித்து, விசாரணைக்கு உதவலாம் எனக் காவல்துறை அறிவித்துள்ளது.







