வெள்ள அபாயம்: ஷா ஆலாம் குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - MBSA

4 நவம்பர் 2026, 7:00 AM
வெள்ள அபாயம்: ஷா ஆலாம் குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - MBSA
வெள்ள அபாயம்: ஷா ஆலாம் குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - MBSA

ஷா ஆலாம், நவ.4: வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தனது நிர்வாகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேற்கொள்ளுமாறு ஷா ஆலாம் மாநகராட்சி (MBSA) அறிவுறுத்தியுள்ளது.

வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் அவசரகாலப் பயன்பாட்டுப் பைகளைத் தயாராக வைத்திருப்பதுடன், நீர்மட்டம் உயரத் தொடங்கினால் தங்களது வாகனங்களைப் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என MBSA கேட்டுக்கொண்டுள்ளது.

அவசரகாலப் பைகளில் முக்கிய ஆவணங்கள், மருந்துகள், மின்விளக்குகள், உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

மேலும், வெள்ளநீர் தேங்கிய சாலைகளில் நடந்து செல்வதையோ வாகனங்களைச் செலுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் MBSA எச்சரித்துள்ளது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தகவலின்படி, 2026/2027ஆம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கி, 2027 மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, 2026 நவம்பர் முதல் 2027 ஜனவரி வரை நாடு முழுவதும் மூன்று முதல் ஐந்து முறை தொடர் கனமழை பெய்யக்கூடும் என்பதால், பல பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம் என MBSA தெரிவித்தது.

அதேவேளையில், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் உடனடியாக வெளியேறுவதற்கும் குடும்பத்தினர் தயாராக இருக்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள் வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசாங்க அமைப்புகள் வெளியிடும் அறிவிப்புகளையும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளம் அல்லது பேரிடர் தொடர்பான அவசரநிலைகள் மற்றும் உதவிகளுக்கு, பொதுமக்கள் MBSA பேரிடர் நடவடிக்கை அறையான PANTAS-ஐ 03-5510 5811 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.