தாமான் ஸ்ரீ மூடா வெள்ளம்: நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையை ஆராயும் ஷா ஆலாம் மாநகராட்சி

1 அக்டோபர் 2026, 6:42 AM
தாமான் ஸ்ரீ மூடா வெள்ளம்: நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையை ஆராயும் ஷா ஆலாம் மாநகராட்சி

ஷா ஆலம், அக். 1: தாமான் ஸ்ரீ மூடாவில் 2021ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட பேரழிவுமிக்க வெள்ளத்துக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஷா ஆலாம் மாநகராட்சி மன்றம் (MBSA) ஆராயவுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பை MBSA மதிப்பதாகவும், அதனை மறுஆய்வு செய்து மேல்முறையீடு செய்வதா என்பது உட்பட அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்கவுள்ளதாகவும் MBSA-வின் நிறுவன மற்றும் பொது தொடர்புத் துறை இயக்குநர் முகமட் ஃபௌஸி அசிஸ் மாமோர் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, தாமான் ஸ்ரீ மூடாவைச் சேர்ந்த 50 குடியிருப்பாளர்கள், 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் தொடர்பில் அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் கடமையை நிறைவேற்றத் தவறியதாகக் கூறி தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றனர்.

அந்த வெள்ளத்தில் 12 குடியிருப்பாளர்கள் உயிரிழந்ததுடன், அப்பகுதி மக்கள் மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்பிலான இழப்புகளை எதிர்கொண்டனர்.

தீர்ப்பில், கூட்டரசு அரசாங்கத்துடன் சிலாங்கூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS) கிளையும் MBSA-வும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

முக்கிய உள்கட்டமைப்புகள் JPS-ன் கீழ் வருவதாகக் கூறி, தனக்குரிய சட்டப்பூர்வப் பொறுப்புகளில் இருந்து MBSA விலக முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதனிடையே, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்பதற்கு சிலாங்கூர் சட்ட ஆலோசகர் முகமட் ஒன் அப்துல் அஸீஸுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக நேற்று தெரிவித்தார்.

அதில் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதா என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.