MBSA கலை இரவில் மீடியா சிலாங்கூர் 5 விருதுகளை வென்றது

19 செப்டெம்பர் 2026, 3:27 AM
MBSA கலை இரவில் மீடியா சிலாங்கூர் 5 விருதுகளை வென்றது
MBSA கலை இரவில் மீடியா சிலாங்கூர் 5 விருதுகளை வென்றது

ஷா ஆலாம், செப் 19 : ஷா ஆலாம் மாநகராட்சி (MBSA) மற்றும் ஊடகங்களுக்கு இடையிலான கலை இரவு விழாவில் (MBSA and Me dia Synergy Gala Night 2025), மீடியா சிலாங்கூர் தனது செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்படக் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பிற்காக ஐந்து விருதுகளை வென்றது.

செய்தியாளர்கள் சிதி சோபியா முகமட் நாசிர், சிதி நாடியா அகமட் ஜம்லூஸ் மற்றும் ஒளிப்படக் கலைஞர் முகமட் ரஹீமி அரிஃபின் ஆகியோர் அவ்விழாவில் விருது பெற்றனர்.

அவர்களுடன், மீடியா சிலாங்கூர் நிறுவனத்திற்கு 'மாநகராட்சித் தலைவரின் சிறப்பு விருதும்' (Anugerah Khas Datuk Bandar) வழங்கப்பட்டது.

சிதி சோபியா, 'அதிகப்படியான டிஜிட்டல் செய்திகளுக்கான விருது' மற்றும் 'அதிகப்படியான செய்தி அறிக்கையிடலுக்கான விருது' ஆகியவற்றில் முதல் இடத்தைப் பிடித்தார்.

மீடியா சிலாங்கூரின் சிதி சோபியா இரு விருதுகளை வென்றார் : படம் : மீடியா சிலாங்கூர்

ஊராட்சி மன்றங்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில், ஊடகவியலாளர்கள் மக்களின் பிரச்சினைகளையும் குரலையும் அதிகாரிகளுக்குக் கொண்டு சேர்க்கும் பாலமாகச் செயல்படுகிறார்கள்.

"எனவே, இந்த அங்கீகாரம் MBSA தொடர்பான பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவது உட்பட, தொடர்ந்து தரமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை உருவாக்குவதற்கு எனக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கிறது," என்று சிதி சோபியா மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், முகமட் ரஹீமி 'ஷா ஆலம் கேட்டோபியா பூனை பொழுதுபோக்கு பூங்கா' (Taman Rekreasi Kucing Catopia Shah Alam) என்ற தனது ஒளிப்படத்திற்காக 'சிறந்த ஒளிப்பட இதழியல் விருது'க்கான முதல் இடத்தைப் பெற்றார்.

முகமட் ரஹீமி சிறந்த ஒளிப்படத்துக்கான விருதை வென்றார் படம்: மீடியா சிலாங்கூர்

இந்த அங்கீகாரம் ஊடகவியலாளர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குவதோடு, தொடர்ந்து சிறந்த படைப்புகளை உருவாக்குவதற்காக ஊக்கமளிப்பதாகவும் அமைகிறது என்று அவர் கூறினார்.

"MBSA-விடமிருந்து கிடைத்த இந்த அங்கீகாரத்தை நான் பெரிதும் மதிக்கிறேன். ஏனெனில், இது எங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் தாங்கள் செய்த பணிகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது. மேலும், செய்திகளைச் சேகரிப்பதில் எங்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் கவனிக்கப்பட்டுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது.இந்த விருது எனது பணியின் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்தவும், சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையிலான சிறந்த மற்றும் தரமான படைப்புகளை வழங்கவும் எனக்கு ஓர் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது," என்று அவர் கூறினார்.

ஒட்டுமொத்த சாதனையாக, சிதி சோபியா தலா 1,500 ரிங்கிட் மதிப்புடைய இரு விருதுகளின் மூலம் மொத்தம் 3,000 ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் கிண்ணத்தையும் வென்றார்.

முகமட் ரஹீமி சிறந்த ஒளிப்பட இதழியல் விருதுக்காக 1,000 ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் கிண்ணத்தையும் பெற்றார்.

ஒளிபரப்புத் துறையில், சிதி நாடியா 'பயன்படுத்திய எண்ணெய் கழிவு இயந்திரம் மூலம் ரொக்கப் பணம் ஈட்டலாம்' என்ற தலைப்பிலான செய்தி அறிக்கைக்காக 'சிறந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு விருது'க்கான முதல் இடத்தைப் பெற்று, 1,500 ரிங்கிட் ரொக்கப் பணத்தைக் வென்றார்.

இந்த ஐந்து வெற்றிகளை நிறைவு செய்யும் விதமாக, மீடியா சிலாங்கூர் 2,000 ரிங்கிட் ரொக்கப் பரிசுடன் மாநகராட்சித் தலைவரின் சிறப்பு விருதையும் பெற்றது.

மாநகராட்சியின் நிர்வாகம் தொடர்பான செய்திகளைச் சேகரித்து வெளியிடும் ஊடகவியலாளர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக 'MBSA மற்றும் ஊடகம் கலை இரவு விழா 2025' நடத்தப்பட்டது.

MBSA மற்றும் ஊடகங்களுக்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு,ஊராட்சி மன்றத்தின் திட்டங்கள், முயற்சிகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க உதவுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.