நாட்டின் சோள இறக்குமதி சார்பைக் குறைக்க சிலாங்கூர், பகாங் மாநிலங்கள் கூட்டு ஒத்துழைப்பு

4 நவம்பர் 2026, 4:55 AM
நாட்டின் சோள இறக்குமதி  சார்பைக் குறைக்க சிலாங்கூர், பகாங் மாநிலங்கள் கூட்டு ஒத்துழைப்பு

கோலாலம்பூர், நவ 4 : மலேசியா, சோள தானிய இறக்குமதியை நம்பியிருப்பதை 10 விழுக்காடு வரை குறைக்கும் நோக்கில், சிலாங்கூரும் பஹாங்கும் இணைந்து விவசாயத் துறையில் ஒரு புதிய கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளன.

முதற்கட்டமாக பகாங்கில் உள்ள பரந்த நிலப்பரப்பையும், சிலாங்கூரின் விவசாய நிபுணத்துவத்தைப் பயன்படுத்தியும் சுமார் 400 ஹெக்டர் பரப்பளவில் தானியச் சோளப் பயிரீடு மேற்கொள்ளப்படுமென , சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

மலேசியா தற்போது கால்நடைத் தீவனத்திற்காகப் பயன்படுத்தப்படும் சோள தானியத்தை இறக்குமதி செய்ய ஆண்டுக்குக் குறைந்தது 6 பில்லியன் ரிங்கிட் செலவிடுகிறது.

எதிர்வரும் காலத்தில் அந்த தானியத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதின் மூலம் வெளிநாட்டுச் சார்பைக் குறைக்க முடியுமென அவர் கூறினார்.

இந்த இரு மாநிலக் கூட்டுத் திட்டம், வெறும் சோளப் பயிரிடுதலோடு மட்டும் நிற்காமல், நவீன நெல் சாகுபடி, சோளப் பயிரீடு , B40 குறைந்த வருவாய் பிரிவினருக்கான 'ஷாசான் மக்மூர்' சமூகப் பொட்டல விவசாயத் திட்டம் மற்றும் விவசாயச் சுற்றுலா மேம்பாடு ஆகிய நான்கு முக்கியப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

இதில் சமூக விவசாயத் திட்டத்திற்காகச் சுமார் 200 ஹெக்டர் நிலமும், விவசாயச் சுற்றுலா மேம்பாட்டிற்காக சுமார் 60 ஹெக்டர் நிலமும் ஒதுக்கப்படவுள்ளன.

தானியச் சோளப் பயிரிடுதல் மற்றும் சமூக விவசாயத் திட்டங்கள் அடுத்த ஓராண்டிற்குள் உடனடியாகத் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டிலேயே சோள உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், கால்நடைத் தீவனத்தின் விலை குறைந்து, அதன் விளைவாகக் கோழி, மாடு, ஆடு மற்றும் பால் பொருட்களின் உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

நேற்று, தலைநகர், ஷங்ரீ லா தங்கும் விடுதியில் நடைபெற்ற, சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்திற்கும் , பகாங் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில், அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.