புத்ராஜெயா, நவ.3: கோலாலம்பூரில் திடீர் வெள்ளம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வடிகால் அமைப்புகளைத் திடீர் ஆய்வுக்கு உட்படுத்துவதுடன், சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, மழைக்காலத்தில் வடிகால்களில் அடைப்புகள் ஏற்படுவதைத் தவிர்த்து, மழைநீர் தடையின்றி வெளியேறுவதை உறுதிப்படுத்த இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
வடிகால் பராமரிப்புப் பணிகள் மழைக்காலத்தில் மட்டுமின்றி, வறண்ட காலத்திலும் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சாலைகள் பார்ப்பதற்குச் சுத்தமாக இருப்பதால் வடிகால் அமைப்புகளும் முறையாகச் செயல்படுகின்றன என்று கருதிவிட முடியாது என்றும், வடிகால் துளைகள் மற்றும் நீர்வழிகளில் குப்பைகள் தேங்கி அடைப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று இங்குள்ள பிரிசின்ட் 9 பகுதியில் Community-Based Eco Recycling Hub (COB3R) மையத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், கோலாலம்பூரில் உள்ள ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியின் கிளை அலுவலகங்களிலும் கண்காணிப்புக் குழுக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஹன்னா கூறினார்.
இந்தக் குழுக்கள் வெள்ள அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கைகளை கோலாலம்பூர் மாநர் மேயரிடம் சமர்ப்பிக்கும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் கோலாலம்பூரில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 30-இலிருந்து 14-ஆகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இத்தகைய கண்காணிப்புகள் அவசியம் என்றார் ஹன்னா.
வெள்ள அபாயப் பகுதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைத்து 10-ஆகக் கொண்டுவருவதே கோலாலம்பூர் மாநகரின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த சுங்கை தோபா ஆற்றில் மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகள், தற்போது ஆண்டுக்கு ஆறு முறை மேற்கொள்ளப்படுவதாக ஹன்னா தெரிவித்தார்.
அதேவேளையில், மாறிவரும் பருவநிலை மற்றும் வழக்கத்திற்கு மாறாகப் பெய்யும் கனமழை காரணமாக, தற்போதுள்ள செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கோலாலம்பூரின் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களில் Sponge City எனப்படும் நீரை இயற்கையாக உறிஞ்சும் நகரக் கட்டமைப்பு அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், மழைநீரை இயற்கையாக நிலத்திற்குள் உறிஞ்சுவதற்கு ஏதுவாக திறந்தவெளிகள் மற்றும் பசுமைப் பகுதிகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
குறிப்பாக, மலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள் கடுமையான கட்டுப்பாட்டுடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், மழைநீரை இயற்கையாக உள்வாங்கும் அப்பகுதிகளின் திறன் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.







