ஷா ஆலாம், நவ.4 – திருமண வாழ்க்கையைத் தொடங்கத் தயாராகும் தம்பதிகள், திருமணத்திற்கு முன்பே முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, தொற்றுநோய்கள் மற்றும் மரபணு நோய்கள் தொடர்பான பாதிப்புகளை கண்டறிந்துகொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, எச்.ஐ.வி. (HIV), ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி, பாலியல் தொடர்பான தொற்றுநோய்கள் உள்ளிட்டவற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என MSU மருத்துவ மையத்தின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசனை நிபுணர் டாக்டர் நூர்னேசா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
திருமணத்திற்கு முன்பே இத்தகைய நோய்கள் கண்டறியப்பட்டால், உரிய சிகிச்சைகளைப் பெறுவதுடன், எதிர்காலத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டங்களையும் பாதுகாப்பான முறையில் வகுக்க முடியும் என்றார் அவர்.

மேலும், தம்பதிகள் தங்களது உடல்நலப் பின்னணி, நோய்கள் தொடர்பான வரலாறு மற்றும் சாத்தியமான மருத்துவ அபாயங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசிக்கொள்வது மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், தலசீமியா (Thalassemia) எனப்படும் மரபணு ரத்த நோய்க்கான பரிசோதனையையும் திருமணத்திற்கு முன்பே மேற்கொள்வது அவசியம் என டாக்டர் நூர்னேசா குறிப்பிட்டார்.
குறிப்பாக, தம்பதிகளில் இருவரும் தலசீமியா நோய்க்கான மரபணுவைக் கொண்டவர்களாக இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் அபாயம் உண்டு. அதனால், இந்த நோய்க்கான பரிசோதனையை முன்கூட்டியே மேற்கொள்வது மிக முக்கியம்.

எனவே, குழந்தைகளின் எதிர்கால உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
இதுதவிர, திருமணத்திற்குப் பிறகு குறிப்பிட்ட காலம் முயற்சித்தும் குழந்தைப் பேறு கிடைக்காத தம்பதிகள், கருவுறுதல் தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொள்ளலாம் என்றார் டாக்டர் நூர்னேசா.
35 வயதுக்குக் குறைவான தம்பதிகள் திருமணமாகி ஓராண்டுக்குப் பிறகும் குழந்தைப் பேறு கிடைக்காவிட்டால் மருத்துவப் பரிசோதனையைப் பரிசீலிக்கலாம்.
அதேவேளையில், 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் ஆறு மாதங்கள் முயற்சித்தும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் மருத்துவ ஆலோசனையையும் பரிசோதனையையும் நாடலாம்.










