புகைமூட்டம்: சிலாங்கூரில் 947 பள்ளிகளுக்கு 200,000-க்கும் மேல் முகக்கவசங்கள் விநியோகம்

12 அக்டோபர் 2026, 10:00 AM
புகைமூட்டம்: சிலாங்கூரில் 947 பள்ளிகளுக்கு 200,000-க்கும் மேல் முகக்கவசங்கள் விநியோகம்

ஷா ஆலாம், அக். 12 – சிலாங்கூரில் நிலவும் புகைமூட்டத்தால் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் உள்ள 947 பள்ளிகளுக்கு 200,000-க்கும் அதிகமான முகக்கவசங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

சிலாங்கூர் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி இதனைத் தெரிவித்தார்.

இன்று மாநிலச் செயலகக் கட்டடத்தின் முகப்புக் கூடத்தில், சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையிடம் முகக்கவசங்கள் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை கூறினார்.

இந்த முகக்கவசங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்கள் (PPD) வாயிலாகப் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும்.

மாணவர்கள் தங்களது உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசங்களை அணியுமாறு மாநில அரசு ஊக்குவிக்கிறது. இருப்பினும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கினார்.

மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி சார்பில் வழங்கப்பட்ட இந்தப் பங்களிப்பு, மாநிலப் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் முன்னெடுப்பாகும் என்றும் நஜ்வான் ஹலிமி குறிப்பிட்டார்.

இந்த முயற்சிக்கு சிலாங்கூர் மந்திரி பெசார் அறக்கட்டளை, டாருல் இஹ்சான் இஸ்லாமிய அறக்கட்டளை மற்றும் மாநில அரசு ஆகியவை ஆதரவளித்துள்ளன.

புகைமூட்டத்தால் பள்ளிகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதுகுறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடும் முறையை மாநில அரசு பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இதன் மூலம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பராமரிப்பதற்கும் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்கும் போதிய நேரம் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

புகைமூட்டம் விரைவில் குறைந்து, மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் கல்வி நடவடிக்கைகள் வழக்கம்போல் தொடரும் எனத் தாம் நம்புவதாகவும் நஜ்வான் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.