சுக்மா 2026: கோலாலம்பூரை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சிலாங்கூர் காற்பந்து அணி

15 ஆகஸ்ட் 2026, 1:36 AM
சுக்மா 2026: கோலாலம்பூரை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சிலாங்கூர் காற்பந்து அணி

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 15: 2026 சுக்மாவில் சிலாங்கூர் ஆண்கள் பிரிவு காற்பந்து அணி வெற்றிகரமான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது.

கெலானா ஜெயாவில் உள்ள எம்பிபிஜே விளையாட்டரங்கில் நடைபெற்ற குரூப் சீ ஆட்டத்தில், சிலாங்கூர் அணி கோலாலம்பூர் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முழுமையாக மூன்று புள்ளிகளைக் கைப்பற்றியது.

தொடக்கம் முதலே கோலாலம்பூர் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே கோல் அடிக்கும் அருமையான வாய்ப்பை அந்த அணி உருவாக்கியது. எனினும், சிலாங்கூர் அணியின் கோல் காப்பாளர் அபாரமாகச் செயல்பட்டு அந்த முயற்சியை முறியடித்தார்.

இதையடுத்து இரு அணிகளும் மாறி மாறி தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுத்த நிலையில், ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் சிலாங்கூர் முதல் கோலை அடித்தது.

பின், கோலாலம்பூர் தற்காப்பு வீரர் விதிமீறலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சிலாங்கூருக்கு பெனால்டி வழங்கப்பட்டது. அந்த பெனால்டியை முகமட் ஹைகல் டேனிஷ் கோலாக மாற்றினார். முதல் பாதி முடிவில் சிலாங்கூர் 2-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் நடப்பு சாம்பியனான கோலாலம்பூர் அணி சிலாங்கூரின் தற்காப்பு அரணை நோக்கி தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்து, கோல் வித்தியாசத்தைக் குறைக்க கடுமையாக முயன்றது.

இதற்கு முன் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கெடாவுக்கு எதிராக 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டிருந்த கோலாலம்பூர் அணிக்கு, சிலாங்கூருக்கு எதிரான இந்த ஆட்டத்தில் வெற்றி அல்லது குறைந்தபட்சம் புள்ளிகளைப் பெறுவது முக்கியமானதாக இருந்தது.

சிலாங்கூரிடம் தோல்வியடைந்தால் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை அந்த அணிக்கு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், கோலாலம்பூரின் தொடர் தாக்குதல் 68ஆவது நிமிடத்தில் பலனளித்தது. மாற்று வீரராகக் களமிறங்கிய முகமட் அரிஃப் ஐமான், தாக்குதல் நகர்வை கோலாக மாற்றினார். இதன் மூலம் கோலாலம்பூர் அணியின் கோல் எண்ணிக்கை 1-ஆக உயர்ந்ததுடன், சிலாங்கூரின் முன்னிலை 2-1 எனக் குறைந்தது.

ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் முகமட் ஸாருல் ஐடிட் சிலாங்கூருக்கான மூன்றாவது கோலை அடித்து அணியின் முன்னிலையை மீண்டும் வலுப்படுத்தினார்.

இறுதியில் சிலாங்கூர் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தனது முதல் ஆட்டத்திலேயே மூன்று முக்கிய புள்ளிகளைக் கைப்பற்றியது.

இந்த வெற்றி மூலம் சுக்மா 2026 காற்பந்து போட்டியில் சிலாங்கூர் அணி தனது காலிறுதி வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.