ஷா ஆலாம், செப்.18 — கோலாலம்பூர் மொத்த விற்பனைச் சந்தையின் தொழிலாளி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் போலீசார் தற்போது சந்தேக நபரை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை காலை சுமார் 8.40 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், 30 வயதுக்கும் மேற்பட்ட ஆடவர் ஒருவர் திடீரென அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தார்.
காயமடைந்தவரின் உடலின் பின்புறத்தில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பெற்ற பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணை குற்றவியல் சட்டம், பிரிவு 325-இன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் அனுவார் பக்ரி அப்துல் சலாம் தெரிவித்தார்.
காயமடைந்த நபருக்கு சந்தேக நபரைத் தெரியாது என்றும், சம்பவத்துக்கான காரணம் மற்றும் தாக்குதலின் பின்னணி குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
சந்தேக நபர் குறித்த தகவல்கள் கிடைத்தால் போலீசாரிடம் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.







