புயலால் சேதமடைந்த புக்கிட் ராயா தேசியப் பள்ளியின் கூரை பழுதுபார்ப்பு பணிகளுக்கு RM200,000 நிதியுதவி

25 ஜூன் 2026, 4:50 AM
புயலால் சேதமடைந்த புக்கிட் ராயா தேசியப் பள்ளியின் கூரை பழுதுபார்ப்பு பணிகளுக்கு RM200,000 நிதியுதவி

ஷா ஆலம், ஜூன் 25: அண்மையில் வீசிய பலத்த புயல் காரணமாகச் சேதமடைந்த உலு லங்காட், புக்கிட் ராயா (SK Bukit Raya) தேசியப் பள்ளியின் கூரையைப் பழுதுபார்க்கும் பணிகள், 200,000 ரிங்கிட் அவசர ஒதுக்கீட்டு நிதியைக் கொண்டு இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளன.

பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதி செய்யும் நோக்கில், உலு லங்காட் மாவட்டக் கல்வி அலுவலகம் இந்த அவசர நிதியைப் பயன்படுத்துவதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளது என டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹான் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

பழுதுபார்க்கும் பணிகள் அனைத்தும் எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொள்ளப்படவுள்ளன என்று குறிப்பிட்ட அவர், பள்ளி வேலை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித ஆபத்தோ அல்லது அசம்பாவிதங்களோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த வார இறுதி நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன என்றார்.

இந்த சம்பவம் நடந்த சமயத்தில் அந்தப் பள்ளியில் ஏற்கனவே ஓர் ஒப்பந்தக்காரர் (Contractor) மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால், அரசாங்கப் பொது நடைமுறைகளின் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டது என்றார்.

அதாவது, ஒரு பள்ளியில் ஏற்கனவே ஓர் ஒப்பந்தக்காரர் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வரும் பட்சத்தில், அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை மற்றொரு புதிய ஒப்பந்தக்காரர் அதே வளாகத்திற்குள் நுழைந்து பணிகளைத் தொடங்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, புயலினால் இப்பள்ளியின் கூரை கடுமையாகச் சேதமடைந்திருந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பெரும் வைரலானதோடு, அங்குப் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

அதனைத் தொடர்ந்தே, சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்பினர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களின் உடனடி நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.