உலகளாவிய இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு: முன்னெச்சரிக்கை கூட்டங்களுக்கு அன்வார் உத்தரவு

3 நவம்பர் 2026, 3:53 AM
உலகளாவிய இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு: முன்னெச்சரிக்கை கூட்டங்களுக்கு அன்வார் உத்தரவு

கோலாலம்பூர், நவ.3 – வெளிநாடுகளில் அதிகரித்து வரும் இணையத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, மலேசியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் மற்றும் மலேசிய தேசிய வங்கியின் (BNM) ஆளுநர் டத்தோஸ்ரீ அப்துல் ரஷீட் கஃபூர் ஆகியோர் தனித்தனியாக அரசு துறைகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் சிறப்புக் கூட்டங்களை நடத்தவுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தயார்நிலையை மேம்படுத்துவதுடன், முக்கியமான அரசு மற்றும் நிதிக் கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இக்கூட்டங்களின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் முக்கியமான டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட இணையத் தாக்குதல்களைத் தொடர்ந்து, உணவுப் பொருட்களை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தங்களது குடிமக்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் நடைபெறும் பாதுகாப்பு மற்றும் அரசியல் மாற்றங்களை மலேசியா தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட அன்வார், குறிப்பாக மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம், யேமனின் தற்போதைய நிலவரம் மற்றும் செங்கடல் பகுதியில் உருவாகும் பாதுகாப்புச் சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் மலேசியாவின் கண்காணிப்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நாட்டில் எதிர்பாராத நெருக்கடிகள் உருவானால் அவற்றை எதிர்கொள்வதற்கான தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுஆய்வு செய்ய தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) ஏற்கெனவே கூட்டம் நடத்தியுள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.

அக்கூட்டத்தில், நடைமுறையில் உள்ள பாதுகாப்பு வழிமுறைகள், அமைச்சுகள், அரசு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, அத்துடன் அவசரச் சூழல்களை எதிர்கொள்வதற்கான நாட்டின் தயார்நிலை ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.