லண்டன், ஜூன் 24: ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) பல மாதங்களாகத் தவித்து வரும் 11,000-க்கும் மேற்பட்ட மாலுமிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான மீட்புத் திட்டத்தை சர்வதேச கடல்சார் நிறுவனம் (IMO) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவாகத் தேவையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் பெறப்பட்டு, பாதுகாப்பான கடல் பயணச் சூழல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கடல்சார் நிறுவனத்தின் பொதுச் செயலாளர் அர்சீனியோ டோமிங்குவேஸ் (Arsenio Dominguez) தெரிவித்தார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்தே இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்ட டோமிங்குவேஸ், இந்தத் திட்டம் ஈரான், ஓமான், பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகள் மற்றும் கடல்சார் தொழில்துறையினரின் நெருக்கமான ஒத்துழைப்போடு செயல்படுத்தப்படும் என்று விளக்கமளித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை அவர் வரவேற்பதோடு, பல மாதங்களாக நீடித்த மோதல்களால் பல்லாயிரக்கணக்கான மாலுமிகள் எதிர்கொண்ட துயரங்களுக்கும், உலகளாவிய வர்த்தகத்திற்கு ஏற்பட்ட முடக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், கடல்சார் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய படியாக இது அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மோதல்களின் போது கடலில் தங்களின் உயிரைத் தியாகம் செய்த 14 மாலுமிகளுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த டோமிங்குவேஸ்; உலகளாவிய வர்த்தகத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.
அதோடு, மாலுமிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்வதற்கும், உலகளாவிய வர்த்தகப் போக்குவரத்து எவ்வித தடையுமின்றி சீராகத் தொடர்வதற்கும் சர்வதேச கடல்சார் நிறுவனம் எப்போதும் தனது முழுமையான அர்ப்பணிப்பை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.







