புதுடெல்லி, செப்.13 — பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, இந்தோனேசியாவில் நிலவி வரும் காட்டுத் தீ மற்றும் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

18ஆவது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் நடைபெற்ற சந்திப்பின்போது இரு தலைவர்களும் இந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த விவகாரங்களுக்கு தீர்வு காண இரு நாடுகளும் ஒருமித்த நிலைப்பாட்டையும், கூட்டு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
கலிமந்தான் மற்றும் சுமாத்திராவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீயினால் உருவாகும் புகை அண்டை நாடுகளைப் பாதித்து வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலுவையில் உள்ள பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக மலேசியாவுக்கு வருமாறு அதிபர் பிரபோவோவுக்கு தாம் மீண்டும் அழைப்பு விடுத்ததாகவும் பிரதமர் கூறினார்.
அந்த விவகாரங்களுக்கு விரைவாகத் தீர்வு காணவும், மலேசியா–இந்தோனேசிய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.







