சொந்த வீடு வாங்க சிரமப்படும் இளம் தம்பதிகளுக்கு ‘ஸ்மார்ட் சேவா’ திட்டம்

3 நவம்பர் 2026, 6:00 AM
சொந்த வீடு வாங்க சிரமப்படும் இளம் தம்பதிகளுக்கு ‘ஸ்மார்ட் சேவா’ திட்டம்

ஷா ஆலாம், நவ.3: சொந்த வீடு வாங்குவதற்குப் போதிய நிதி வசதியின்றித் தவிக்கும் இளம் தம்பதிகள், சிலாங்கூர் அரசின் ஸ்மார்ட் சேவா திட்டத்தின் மூலம் குறைந்த வாடகையில் வீடுகளைப் பெற்று, எதிர்காலத்தில் சொந்த வீடு வாங்குவதற்கான சேமிப்பையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய வாடகைதாரர்கள் தாங்கள் செலுத்திய மொத்த வாடகையில் 30% தொகையைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர்.

சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து கழகத்தின் (LPHS) இடைக்காலத் தலைமை நிர்வாக இயக்குநர் முகமட் ஹஃபிஸ் ஹசான் இதனைத் தெரிவித்தார்.

குறிப்பாக, தற்போது வீடு வாங்குவதற்கான நிதித் தகுதியைப் பெறாத இளம் தம்பதிகள் மற்றும் குறைந்த, நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இத்திட்டம் உதவியாக இருக்கும் என்றார் அவர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், சொந்த வீடு வாங்குவதற்கான பொருளாதார வசதியை இன்னும் ஏற்படுத்திக்கொள்ளாதவர்களுக்கு இடைக்காலக் குடியிருப்பு வசதியை வழங்குவதுடன், எதிர்கால வீட்டுடைமைக்கான நிதிச் சேமிப்பையும் ஊக்குவிக்கிறது.

நிபந்தனைகளுக்கு உட்பட்டு திருப்பி வழங்கப்படும் 30% தொகையைச் சொந்த வீடு வாங்குவதற்கான முன்பணமாகவும் இதர செலவுகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என முகமட் ஹஃபிஸ் விளக்கினார்.

இதன் மூலம், உடனடியாக வீடு வாங்க முடியாத இளம் தம்பதிகள் முதலில் வாடகை வீட்டில் குடியேறி, அதேவேளையில் தங்களது நிதி நிலைமையைச் சீரமைத்துக்கொள்ளவும் எதிர்காலத்தில் சொந்த வீடு வாங்குவதற்குத் தயாராகவும் வாய்ப்புக் கிடைப்பதாக அவர் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ், மாத வாடகை 450 முதல் 1,300 ரிங்கிட் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை இத்திட்டத்தின் கீழ் வீடுகளை வாடகைக்கு எடுக்கலாம்.

மேலும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இத்திட்டத்திற்கான ஆர்வம் அதிகமாகக் காணப்படுவதாகவும் முகமட் ஹஃபிஸ் குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, ஸ்மார்ட் சேவா திட்டத்தின் கீழ் மொத்தம் 1,326 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 935 வாடகைதாரர்கள் பயனடைந்துள்ளனர்.

இதற்கிடையில், சிலாங்கூரின் இரண்டாவது வளர்ச்சித் திட்டமான(RS-2) திட்டத்தின் கீழ், 2030-ஆம் ஆண்டுக்குள் வீடுகளின் எண்ணிக்கையை 3,000 -ஆக உயர்த்த மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

குறிப்பாக, வீடு வாங்குவதற்கான வங்கிக் கடன் அல்லது நிதியுதவியைப் பெறுவதற்கான தகுதியை இன்னும் எட்டாதவர்களுக்கும் குடியிருப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்த விரிவாக்கத்தின் நோக்கமாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.