ஷா ஆலாம், அக். 13 – சிலாங்கூரில் ஸ்மார்ட் வாடகை (Smart Sewa) திட்டத்தில் காஜாங், பெட்டாலிங் ஜெயா, கிள்ளான் மற்றும் ஷா ஆலாம் ஆகிய பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக மாநில வீடமைப்பு மற்றும் கலாச்சாரப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.
இப்பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுப்பதற்கான தேவை அதிகமாக இருப்பதால், பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.

தற்போது சிலாங்கூரில் ஸ்மார்ட் வாடகைத் திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 3,000 வீடுகள் உள்ளன. சொந்தமாக வீடு வாங்கும் வசதியின்றித் தவிக்கும் மக்களுக்கு உதவ செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தகுதியுடையவர்கள் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை வீடுகளை வாடகைக்கு எடுக்க முடியும்.
மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் மூலம் கிடைக்கும் பங்களிப்புகள் அல்லது ஈடாகப் பெறப்படும் வீடுகள் ஸ்மார்ட் வாடகைத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
அதேவேளையில், இத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாத பகுதிகளில் தேவைக்கேற்ப வீடுகளை வழங்குவதற்காக, வீட்டு மேம்பாட்டாளர்களிடமிருந்து குடியிருப்புகளை வாங்கி வாடகை வீடுகளாக மாற்றுவதாகவும் போர்ஹான் தெரிவித்தார்.

எட்டு மாநிலங்களைச் சேர்ந்த வீடமைப்பு முகமைகள் பங்கேற்ற தேசிய வீடமைப்பு கருத்தரங்கைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஸ்மார்ட் வாடகைத் திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகள் வாடகைக்கு இருந்த பின்னரும் வீடு வாங்குவதற்கான வங்கிக் கடனைப் பெறத் தகுதி பெறாதவர்கள், வாடகைக் காலத்தை மேலும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கோரி மேல்முறையீடு செய்யலாம்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் வாடகைக்கு இருக்கும் பயனாளர்கள் தங்களது வாடகைக் காலத்தை நிறைவு செய்த பின்னர், செலுத்திய நிகர வாடகைத் தொகையில் 30 விழுக்காட்டைத் திரும்பப் பெறும் வசதியையும் கொண்டுள்ளனர்.

இந்தத் தொகையைப் பயன்படுத்தி சொந்த வீடு வாங்குவதற்கான முன்பணம், ஒப்பந்தச் செலவுகள் மற்றும் வழக்கறிஞர் கட்டணங்கள் உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்ட முடியும்.
உதாரணமாக, ஒருவர் ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 30,000 ரிங்கிட் வாடகை செலுத்தியிருந்தால், அதில் 30 விழுக்காடான 9,000 ரிங்கிட் அவருக்குத் திருப்பி வழங்கப்படும்.
இதனிடையே, சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்தின் (LPHS) பதிவுகளின்படி, 2018ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் வரை பெறப்பட்ட ரூமா சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்ட விண்ணப்பங்களில் ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் இளம் வயதினரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







