ஷா ஆலாம், நவ 2 : வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள ஹுலு லங்காட் மாவட்ட நில அலுவலகம் முழுமையாக தயாராக உள்ளது என்று ஹுலு லங்காட் மாவட்ட அதிகாரி டத்தோ முஹமட் ஜுஸ்னி ஹாஷிம் தெரிவித்தார்.
பேரிடர் மேலாண்மை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது உள்ளிட்ட தங்களின் கடமைகளைச் செய்ய ஒவ்வொரு அமைப்பும் தயாராக இருப்பதை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இடையே நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
"இவ்வாண்டின் இறுதியில், ஹுலு லங்காட்டில் ஒரு பெரிய வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளது. மாவட்ட அளவில், ஒவ்வொரு அமைப்பும் தனது சிறந்த பங்களிப்பை வழங்குவதை உறுதி செய்வதற்காக நாங்கள் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி வருகிறோம்.
" 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளோம். ஒவ்வொரு அமைப்பும் அதன் பங்கை புரிந்து கொண்டுள்ளது; மேலும் வியூகங்கள் அவ்வப்போது மேம்படுத்தப்படும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
முன்னதாக, மலேசிய வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கியதாகவும், இது மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்றும், பருவமழையின் ஆரம்ப கட்டத்தில் மூன்று முதல் ஐந்து முறை தொடர்ச்சியான கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தது.
வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நீண்டகால முயற்சிகள் குறித்துப் பேசிய ஜுஸ்னி, RM500 மில்லியன் செலவிலான சுங்கை லங்காட் இரண்டாம் கட்ட வெள்ளத் தடுப்புத் திட்டம் தற்போது குத்தகையாளர் தேர்வு கட்டத்தில் உள்ளது என்றும், இது நிறைவடைய ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றும் கூறினார்.
சுங்கை லங்காட் இரண்டாம் கட்ட வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் முதல் தொகுப்பு (Package 1), கம்புங் சுங்கை லுய் முதல் தாமான் ஸ்ரீ நந்திங் வரையிலான ஆற்றின் பகுதியை மேம்படுத்துவதை உள்ளடக்கியதுடன், இதற்காக RM512 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.







