ஷா ஆலாம், ஜூன் 26: சிலாங்கூர் மாநில அரசு மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ ஆகியவை இணைந்து நடத்தும் உலு லங்காட் மாவட்டத்திற்கான 'ஜோப்கேர் சிலாங்கூர்' (Jelajah JobCare Selangor) வேலைவாய்ப்புச் சந்தை நாளை அம்பாங்கில் உள்ள டத்தோ அகமட் ரசாலி மண்டபத்தில் (Dewan Dato' Ahmad Razali) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் நாட்டின் 20 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பை வழங்கவுள்ளதாக சிலாங்கூர் மாநில மனிதவளத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார். வேலை தேடுபவர்கள் தங்களின் அண்மைய சுயவிவரக் குறிப்பு (Resume) மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன், முறையான நேர்த்தியான உடையில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேரடியாகவே நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் வேளையில், தொழில் வழிகாட்டுதல் ஆலோசனைகள், அரசு நிறுவனங்களின் கண்காட்சிகள் மற்றும் இலவச ஆரோக்கிய பரிசோதனைகள் போன்ற பயனுள்ள இதர நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.
இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உள்ள லிங்க் மூலமாகவோ அல்லது விளம்பர சுவரொட்டியில் உள்ள கியூஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ தங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.







