ஷா ஆலாம், அக். 11 — புகைமூட்டத்தால் உலு லங்காட், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் பெர்டானா மாவட்டக் கல்வி அலுவலகங்களின் (PPD) கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் நாளை, அக்டோபர் 12ஆம் தேதி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
சிலாங்கூரின் இதர பகுதிகளில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
மேலும், ஜோகூர் மாநிலம் முழுவதிலும், கோலாலம்பூரில் உள்ள பங்சார்-பூடூ மாவட்டக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.
மலாக்கா, பினாங்கு, புத்ராஜெயா, லாபுவான், பேராக், பகாங், நெகிரி செம்பிலான், கிளந்தான், திரங்கானு, கெடா, பெர்லிஸ், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களிலும் கூட்டரசுப் பிரதேசங்களிலும் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.
இதற்கிடையில், பள்ளிகள் தொடர்பான அண்மைய அறிவிப்புகள் மற்றும் நிலவரங்களை அறிந்துகொள்ள, பெற்றோர்களும் பள்ளி நிறுவாகத்தினரும் கல்வி அமைச்சு (KPM), மாநிலக் கல்வித் துறைகள் (JPN) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு ஃபட்லினா கேட்டுக்கொண்டார்.







