ஷா ஆலாம், அக். 13 – புகைமூட்டத்தால் உலு லங்காட் மற்றும் செப்பாங் மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை, அக்டோபர் 14ஆம் தேதி மூடப்படும் என சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை (JPNS) அறிவித்துள்ளது.
இந்த இரு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என மாநிலக் கல்வித் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேவேளையில், மற்ற மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்.
பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள், பள்ளிகள் மூடப்படுவது குறித்த தகவலை மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், மாணவர்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் அவை மீண்டும் திறக்கப்படும் தேதி தொடர்பான மேல் விவரங்கள் மலேசியக் கல்வி அமைச்சு (KPM) மற்றும் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ தளங்களில் அறிவிக்கப்படும்.







