ஹுலு லங்காட் , நவ 1 : மலாக்கா மாநிலத் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தால், முதலமைச்சராகக் கூடிய வேட்பாளராக அக்கூட்டணியின் மலாக்கா மாநிலத் தலைவர் அட்லி ஜஹாரி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
காஜாங் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பாக்காத்தான் ஹரப்பான் தேர்தல் இயக்குனர் டத்தோ ஸ்ரீ அமீருடின் ஷாரி செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
முதலமைச்சர் வேட்பாளருக்கு வேறு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட போதிலும், இறுதியில் அட்லி ஜஹாரி ஒருமித்த தேர்வாக முன்னிறுத்தப்பட்டார் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், இக்கூட்டணியின் 'மலாக்கா நம்மில்லம்' (Melaka Rumah Kita) எனும் தேர்தல் அறிக்கை இன்னும் மூன்று நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அமீருடின் தெரிவித்தார்.
இந்த மாநிலத் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணி கடுமையான போட்டியை வழங்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
மலாக்காவின் முன்னாள் முதலமைச்சரான அட்லி ஜஹாரி, இம்முறை புக்கிட் காத்தில் தொகுதியில் பெரிகாத்தான் நேஷனல் (PN), சுயேச்சை மற்றும் பெர்சாமா கட்சி வேட்பாளர்களுடன் நான்கு முனைப் போட்டியை எதிர்கொள்கிறார்.








