ஷா ஆலாம், அக்டோபர் 8 - சிலாங்கூர் மாநில அரசுக்கும் பெர்சத்து (Bersatu) கட்சியின் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படவில்லை என்றும், அது குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
அடுத்த மாதம் மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அந்த ஒத்துழைப்பு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே உடன்பாடு எட்டப்படுவதற்கு முன்பு சில விஷயங்களைச் சீரமைக்க வேண்டியிருப்பதால், பேச்சு வார்த்தைகள் இன்னும் தொடர்ந்து வருவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை . இது ஒரு சாதாரண விவாதம் தான்; பேச்சுவார்த்தைகள், விட்டுக்கொடுப்புகள் என அனைத்தும் நடந்து வருகின்றன. விவாதங்கள் இன்னும் முடிவடையவில்லை, இரு தரப்பும் உடன்பாட்டை எட்டும்போது நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் .
எனக்குப் புரிந்தவரை, அவர்களிடம் டத்தோ ரஷீத் உட்பட 11 அல்லது 12 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் எனவே, அவர்கள் அனைவரும் இதில் இணைந்தால் மகிழ்ச்சி. ஆனால், இப்போதைக்கு இது ஆரம்பக்கட்டம் என்பதால் நாம் சூழ்நிலையைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
மாநில சட்டமன்றத்தின் வரவு செலவுத் திட்டக் கூட்டத்தொடருக்கு முன்பாக இது நடக்கும் என்று நம்புகிறோம் . எல்லாம் சுமுகமாக நடந்து, ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலை வந்தால், நாங்கள் அதைச் செய்வோம்," என்று இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், சிலாங்கூரில் எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைப்பை உருவாக்குவதில், கூட்டரசு மட்டத்தில் முன்பு செய்யப்பட்ட 'ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்' ( CSA) அனுபவங்களை மாநில அரசு கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்றும் அவர் விளக்கினார்.
"இது கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, பக்காத்தான் ஹராப்பான் மற்றும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி இடையே ஏற்பட்ட CSA ஒப்பந்தத்தின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வதைப் போன்றது," என்றார் அவர்.
முன்னதாக, சிலாங்கூர் பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக விரைவில் மாநில அரசுடன் சந்திப்பு நடத்துவார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கட்சியின் உள்வட்டாரத் தகவலின்படி, இந்த ஒத்துழைப்பில் அந்தத கட்சியின் மொத்தம் 11 சட்டமன்ற உறுப்பினர்களும் ஈடுபடுவார்கள் என்றும், இதன் பிறகு அவர்கள் மாநில அரசின் ஆதரவாளர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.







