மலாக்கா தேர்தல் : எதிர்கட்சிகளின் அவதூறுகளுக்கு உண்மைகளின் மூலம் பதில்

31 அக்டோபர் 2026, 9:45 AM
மலாக்கா தேர்தல்  : எதிர்கட்சிகளின் அவதூறுகளுக்கு உண்மைகளின் மூலம்  பதில்
மலாக்கா தேர்தல்  : எதிர்கட்சிகளின் அவதூறுகளுக்கு உண்மைகளின் மூலம்  பதில்
மலாக்கா தேர்தல்  : எதிர்கட்சிகளின் அவதூறுகளுக்கு உண்மைகளின் மூலம்  பதில்

மலாக்கா, அக் 31 : மலாக்கா மாநிலத் தேர்தல் பரப்புரைகளின்போது எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் அனைத்து அவதூறுகளுக்கும் கேள்விகளுக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி தகுந்த பதிலளிக்கும் என்று அதன் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் தவறான மற்றும் திசைதிருப்பும் பரப்புரைகளால் பாதிக்கப்படாமல், உண்மைத் தரவுகளின் அடிப்படையில் வாக்காளர்கள் சரியான முடிவை எடுப்பதற்கு ஏதுவாக அவர்களுக்குத் துல்லியமான தகவல்கள் கிடைக்கப் பெறுவது அவர்களின் உரிமை என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அனைத்து அவதூறுகளுக்கும் உண்மைகளின் அடிப்படையில் உடனுக்குடனும் உறுதியாகவும் பதிலளிக்கும் என்றும் அவர் கூறினார்.

அதே வேளையில், பக்காத்தான் ஹரப்பான் கட்சியின் கொள்கையான முதிர்ந்த அரசியலுக்கு ஏற்ப, அனைத்து வேட்பாளர்களும் ஒழுக்கத்தோடும் தொழில்முறைப்படியும் தங்களது பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அமிருதின் நினைவூட்டினார்.

தேர்தல் ஆணையத்தால் எவ்வித நிராகரிப்பும் இன்றி, பக்காத்தான் ஹரப்பான் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 24 வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வமாகப் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் பங்கீட்டின்படி, கெஅடிலான் கட்சி மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அவை தஞ்சோங் பிடாரா, ஆயர் லிமாவ், ரெம்பியா, மாச்சாப் ஜெயா, அசாஹான், பாயா ரும்புட், கெலிபாங், ஆயர் மோலெக், ரிம் மற்றும் செர்காம் ஆகிய தொகுதிகளாகும்.

டிஎபி கட்சி (DAP) காடெக், பெங்காலான் பத்து, ஆயர் குரோ, கெசிடாங், கோத்தா லக்சமணா, டூயோங் மற்றும் பண்டார் ஹிலிர் ஆகிய 7 தொகுதிகளில் களம் காண்கிறது.

அதே வேளையில், அமானா கட்சி கோலா லிங்கி, டூரியான் துங்கல், புக்கிட் காட்டில், தெலோக் மாஸ், மெர்லிமாவ், தாபோ நானிங் மற்றும் சுங்கை ரம்பாய் ஆகிய 7 தொகுதிகளில் தனது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.

இன்றைய வேட்புமனுத் தாக்கல் சுமுகமாக முடிவடைந்திருப்பது, வேட்பாளர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிவதற்கும், மாநிலத்தின் எதிர்காலத்திற்கான தங்களின் வாக்குறுதிகளைச் சமர்ப்பிப்பதற்கும் ஒரு புதிய வழியைத் திறந்துவிட்டுள்ளது என்று அமிருதின் கூறினார்.

மேலும், இந்தத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி "மலாக்கா நம்மில்லம்" (Melaka Rumah Kita) என்ற முக்கியக் கருப்பொருளை முன்வைத்து தங்களது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.