ஷா ஆலாம், செப் 20 - பெர்சாத்து உட்பட அரசியல் ஒத்துழைப்பு குறித்த அனைத்து பேச்சு வார்த்தைகளையும் , ஹராப்பான் கூட்டணி, அதன் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியிடமே ஒப்படைத்திருக்கிறது.
அதனை அமிரூடின் கவனித்துக் கொள்வதால் தாம் அது குறித்து எதுவும் கருத்துரைக்க விரும்பவில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இன்று சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'முன்னோடி புரட்சியாளர்களின் மறுசந்திப்பு தேநீர் விருந்து' நிகழ்ச்சிக்குப் பிறகு, ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
அந்நிகழ்ச்சியில், பிரதமரின் துணைவியார் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரியும் கலந்துக் கொண்டனர்.
முன்னதாக, புதிய அரசியல் ஒத்துழைப்பு ஹரப்பானையும் உட்படுத்தியிருக்கலாமெனும் சாத்தியத்தை , பெர்சாத்து கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் மறுக்கவில்லை..
மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள , புதிய அரசியல் ஒத்துழைப்புகள் தொடர்பில் உள்நாட்டில் சில அரசியல் கட்சிகளுடன் தொடக்க நிலையிலான சந்திப்புகள் நடைபெற்றதாகவும் முஹிடின் கூறியிருந்தார்.
இதனிடையே, தற்போதைய அரசியல் மாற்றங்கள் ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான அரசியலைக் கருத்தில் கொண்டு, பல்வேறு அரசியல் கூட்டணிகள் ஏற்படுவதைச் சாத்தியமாக்குகிறது என ஹராப்பான் கூட்டணியின் தகவல் தொடர்பு இயக்குநர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









