ஷா ஆலாம், ஆகஸ்ட் 30- மலாக்கா கெஅடிலான் கட்சி, எதிர்வரும் அம்மாநிலத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை முன்கூட்டியே அறிவிக்கும்.
அதன் வழி, வாக்காளர்களைச் சந்திப்பதற்கு முன்னர் புதிய வேட்பாளர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள போதிய அவகாசம் இருக்குமென, மலாக்கா கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின் நடப்பு தலைவர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் தெரிவித்தார்.
வேட்பாளர்களைத் தேர்தெடுக்கும் நடைமுறை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்னர் கட்சித் தலைவர் வேட்பாளர் பட்டியல் குறித்து இறுதி முடிவெடுப்பார் என உயர்கல்வி துணையமைச்சருமான அவர் கூறினார்.
மேலும், வேட்பாளர் பட்டியலில் பெண்கள், இளம் சமூகத்தினர் ஆகியோரின் குரலும் இடம்பெற்றிருக்க முன்கூட்டியே பட்டியலைத் தயார்படுத்தும் நடவடிக்கை அவசியமாகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அம்மாநிலத் தேர்தலில் ஹரப்பான் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டது.
" ஆனால் தேசிய முன்னணியுடன் ஒத்துழைப்பு இறுதியானால் அந்த தொகுதிப் பங்கீட்டில் மாற்றம் இருக்கலாம் " என அடாம் அட்லி கூறினார்.
நேற்றிரவு, இங்கு புக்கிட் பியாதுவில் , ஹங் துவா ஜயா கிளையின் மாநிலத் தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைத்தப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.




