புத்ராஜெயா, ஜூலை 18: மலேசியாவில் உள்ள 10 குடிநுழைவுத் துறை கிளைகளில் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) சேவை முகப்பிடங்கள் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் ஐந்தாம் கட்டத்தை எட்டியுள்ள பராமரிப்புப் பணிகளுக்கு (System Maintenance) வழிவகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தற்காலிக மூடல் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள கிளைகளின் விபரங்களை குடிநுழைவுத் துறை தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதன்படி, பெர்லிஸ் யுடிசி (UTC Perlis), கெடாவில் உள்ள அலோர் ஸ்டார், பேராக் மாநிலத்தில் உள்ள லுமுட் மற்றும் தெலுக் இந்தான், சிலாங்கூரில் உள்ள கோலா லங்காட் மற்றும் கோலா குபு பாரு ஆகிய கிளைகள் இதில் அடங்கும். மேலும், நெகிரி செம்பிலானின் போர்ட்டிக்சன், பகாங் மாநிலத்தில் உள்ள தெமர்லோ மற்றும் ரவுப், ஜோகூரில் உள்ள மெர்சிங் ஆகிய கிளைகளும் இந்த ஞாயிற்றுக்கிழமை வரை தற்காலிகமாகச் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 71 கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்களை உள்ளடக்கிய பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாகவே, இந்த 10 கிளைகளின் தற்காலிக மூடல் கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மூடல் காலக்கட்டத்தில், சம்பந்தப்பட்ட கிளைகளில் நேரடியாக முகப்பிடங்களில் கடப்பிதழுக்கு விண்ணப்பிப்பது, ‘மைஆன்லைன் பாஸ்போர்ட்’ (MyOnline Pasport) வழியாக விண்ணப்பிப்பது மற்றும் கடப்பிதழ் அச்சிடுவது ஆகிய அனைத்துச் சேவைகளும் முற்றிலும் தடைபடும்.
இதன் காரணமாக, பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது கடப்பிதழ் விண்ணப்ப விவகாரங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அத்துடன், இந்தத் தற்காலிக மூடல் குறித்த கூடுதல் மற்றும் விரிவான விபரங்களை அறிந்துகொள்ள பொதுமக்கள் மலேசியக் குடிநுழைவுத் துறையின் அதிகாரப்பூர்வத் தகவல் ஊடகங்களை நாடலாம்.





