ஷா ஆலாம், அக். 23 – 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ், இ-ஹெய்லிங் ஓட்டுநர்களின் மாதாந்திர சராசரி நிகர வருமானம் RM227 வரை அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பை மலேசிய கிராப் ஓட்டுநர்கள் சங்கம் (GDMA) வரவேற்றுள்ளது.
இந்த முயற்சி அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்கும், அன்றாடச் செலவுகள் மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்டுவதற்கும் ஓரளவு உதவும் என அச்சங்கத்தின் தலைவர் முகமட் அஸ்ரில் அஹ்மாட் தெரிவித்தார்.
தற்போதைய வருமானத்துடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், ஓட்டுநர்களுக்கு ஓரளவு நிவாரணமாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.

முகமட் அஸ்ரில் அஹ்மாட்
இதற்கிடையில், இந்த உதவித் திட்டத்தில் வாகனப் பராமரிப்பு, காப்புறுதிச் செலவுகளுக்கான உதவிகளும், தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்த பெர்கேசோ (PERKESO) பங்களிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
கடந்த அக்டோபர் 9ஆம் தேதி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசாங்கமும் கிராப் நிறுவனமும் இணைந்து நிதியளிக்கும் RM160 மில்லியன் மதிப்பிலான உதவித் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டம் 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம், இ-ஹெய்லிங் ஓட்டுநர்களின் மாதாந்திர சராசரி நிகர வருமானம் RM227 வரையும், பி-ஹெய்லிங் பொருள் விநியோகப் பணியாளர்களின் மாத வருமானம் RM100 வரையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிக் பொருளாதாரத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வருமான விகிதம், வருமானக் கணக்கீட்டு முறை மற்றும் குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்புத் தரநிலைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கிக் ஆலோசனைக் குழு இறுதி செய்யும் வரை இந்த உதவித் திட்டம் தற்காலிக நடவடிக்கையாகத் தொடரும்.
பேச்சுவார்த்தைகள் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.







