ஷா ஆலாம், செப். 22 — சுபாங் ஜெயாவில் பல் மருத்துவமனை ஒன்றில் உரிமம் இன்றி சிகிச்சைகளை வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில வெளிநாட்டவர்கள் சந்தேகத்திற்குரிய முறையில் பல் மருத்துவச் சேவைகளை வழங்கி வருவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த பல் மருத்துவமனை அதிக வருமானம் கொண்ட வாடிக்கையாளர்கள் அதிகம் நாடும் இடமாகக் கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட நிலையம் சட்டப்பூர்வமாக தனியார் பல் மருத்துவமனையாகப் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், அங்கு பல வெளிநாட்டவர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் பல் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது சோதனையின்போது கண்டறியப்பட்டது.
அதேவேளை, அந்த மருத்துவமனையில் தகுதி பெற்ற மலேசிய பல் மருத்துவர் ஒருவரும் பணியாற்றி வந்துள்ளார்.
சோதனையின்போது 20 வயதுடைய இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் அமலாக்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, வெளிநாட்டு ஆண் ஒருவர் சோதனையின்போது அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் மருந்துகள் மற்றும் பல்வேறு பல் மருத்துவ உபகரணங்களும் அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக மேல் விசாரணைகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







