வாசிப்பு, சிந்தனை திறனின் வீழ்ச்சி நாகரிகத்திற்கு சவாலாக உள்ளது: அன்வார்

29 அக்டோபர் 2026, 1:50 AM
வாசிப்பு, சிந்தனை திறனின் வீழ்ச்சி நாகரிகத்திற்கு சவாலாக உள்ளது: அன்வார்

கோலாலம்பூர், அக்.29 – டிஜிட்டல் யுகத்தில் வாசிப்பு மற்றும் ஆழமான கற்றல் கலாச்சாரம் வீழ்ச்சியடைந்து வருவதுடன், சிந்தனையின் ஆழமும் குறைந்து வருவது நாகரிகத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்தக்கூடிய சவாலாக உருவெடுத்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஜேம்ஸ் மரியட் எழுதிய _“The New Dark Ages: The End of Reading and the Dawn of a Post-Literate Society”_ என்ற புதிய நூலை ஆழ்ந்து படித்த பின்னர், இவ்விடயத்தைத் தாம் சுட்டிக்காட்டுவதாகப் பிரதமர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டார்.

நாகரிகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என்பது அறிவைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போவதுடன் மட்டும் தொடர்புடையதல்ல என்று அவர் தெரிவித்தார்.

மாறாக, இன்று தகவல்கள் அளவுக்கு அதிகமாகக் கிடைக்கின்ற சூழலிலும், அவற்றைப் படிப்பதற்கும், சிந்தித்துப் பார்ப்பதற்கும், ஆழமாகவும் விமர்சன ரீதியாகவும் சிந்திப்பதற்கும் தேவையான ஆர்வமும் பொறுமையும் மக்களிடையே குறைந்து வருவதே முக்கியப் பிரச்சனை என அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, வரலாற்றை நினைவுகூர்ந்த பிரதமர், இலக்கியத்துக்கும் அறிவுசார் மரபுக்கும் கடந்த காலங்களில் மக்கள் அளித்த உயரிய மதிப்பையும் சுட்டிக்காட்டினார்.

1885ஆம் ஆண்டு பிரான்ஸின் புகழ்பெற்ற இலக்கிய மேதை விக்டர் ஹியூகோ மறைந்தபோது, அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகப் பாரிஸில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் திரண்டதை அவர் நினைவுபடுத்தினார்.

அதேபோன்று, 1881ஆம் ஆண்டு புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி மறைந்தபோதும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டதாக அன்வார் தெரிவித்தார்.

இந்த வரலாற்றுச் சம்பவங்கள், அக்காலச் சமூகத்தினர் இலக்கியம், பண்பாடு, அறிவுசார் மரபு மற்றும் சிந்தனை ஆகியவற்றுக்கு எந்த அளவுக்கு உயரிய மதிப்பளித்தனர் என்பதை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

“அவர்கள் இருவரும் மன்னர்களோ அல்லது போரில் வெற்றிபெற்ற படைத்தளபதிகளோ அல்லர். மாறாக, தங்களது சிந்தனைகளால் மக்களின் உள்ளங்களிலும் உணர்வுகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர்களும் அறிஞர்களுமாவர்,” என்று பிரதமர் தெரிவித்தார்.

தகவல்கள் விரல் நுனியில் கிடைக்கும் இன்றைய டிஜிட்டல் உலகில், வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் ஆழமான சிந்தனைப் பழக்கத்தையும் பாதுகாப்பது மிகவும் அவசியமானது என்பதைப் பிரதமரின் கருத்துகள் வலியுறுத்துகின்றன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.