ஷா ஆலம், அக்.30: சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா (SARA) உதவித் திட்டத்தின் கீழ், கடந்த அக்டோபர் 22ஆம் தேதி வரை மொத்தம் 360 கோடி ரிங்கிட் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிஸான் தெரிவித்தார்.
தகுதி பெற்ற பயனாளிகளுக்கு ரஹ்மா ரொக்க உதவித் திட்டம் (STR) மற்றும் சாரா உதவித் திட்டத்தின் கீழ் வழங்கிய மொத்த உதவித்தொகை ஏறத்தாழ 1,200 கோடி ரிங்கிட்டை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாரா உதவியைப் பெற்றுள்ள சுமார் 90 லட்சம் பயனாளிகள் இதுவரை அதனைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் மொத்தம் 610 கோடி ரிங்கிட் மதிப்பிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உதவியைப் பயன்படுத்தும் விகிதம் 99.7 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, ‘அனைவருக்குமான சாரா’ (SARA Untuk Semua) திட்டத்தின் கீழ் 2 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் உதவியைப் பயன்படுத்தியுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் 190 கோடி ரிங்கிட் மதிப்பிலான பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதுடன், பயன்பாட்டு விகிதம் 92 விழுக்காடாக உள்ளதாக அமீர் ஹம்சா தெரிவித்தார்.
2027-ஆம் ஆண்டுக்கான விநியோகச் சட்டமூலத்தின் கொள்கை நிலை விவாதத்திற்கான இறுதிப் பதிலுரையின்போது, மக்களவையில் அவர் இத்தகவல்களை வெளியிட்டார்.
தற்போது சாரா உதவித் திட்டத்தின் கீழ் 15 வகையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுமார் 1.4 லட்சம் பொருட்கள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் கூறினார்.
அடுத்து ஆண்டு முதல் சாரா உதவித் திட்டத்தின் பயன்பாட்டு வரம்பை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கூட்டரசு விவசாயச் சந்தைப்படுத்தல் வாரியத்தின் (FAMA) கீழ் செயல்படும் 216 உழவர் சந்தைகள் மற்றும் பாரம்பரியச் சந்தைகளில், உணவுப் பொருட்களை வாங்குவதற்கும் சாரா உதவியைப் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம், பயனாளிகள் தங்களது அன்றாட உணவுத் தேவைகளுக்கான காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சாரா திட்டத்தின் கீழ் இணைந்துள்ள வணிகப் பங்காளிகளின் எண்ணிக்கை தற்போது நாடு முழுவதும் சுமார் 15,000 வணிக வளாகங்களாக அதிகரித்துள்ளன. 2024-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 700-ஆக மட்டுமே இருந்தது.
தற்போதுள்ள வணிகப் பங்காளிகளில் சுமார் 7,000 இடங்கள் சிறிய மளிகைக் கடைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சொந்தமான விற்பனை நிலையங்கள் என அமீர் ஹம்சா குறிப்பிட்டார்.
சாரா உதவித் திட்டம் பயனாளிகளின் அத்தியாவசியச் செலவுகளைக் குறைப்பதுடன், சிறு வணிகர்கள், உள்ளூர் மளிகைக் கடைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் பங்களித்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.






