கோலாலம்பூர், அக். 1: சாரா மாதாந்திர உதவித்தொகை இன்று முதல் மக்களுக்கு விநியோகிக்கப்படும். தகுதியுடைய பயனாளிகளின் மைகார்ட் அட்டைகளில் வரவு வைக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஹ்மா உதவி (STR) பெறும் குடும்பங்களுக்கு மாதம் RM100 சாரா உதவி வழங்கப்படும். அதேவேளை, மூத்த குடிமக்கள் மற்றும் தனிநபர்களுக்கு தலா மாதம் RM50 வழங்கப்படும்.

STR மற்றும் eKasih திட்டங்களின் கீழ் தகுதி பெற்றவர்களுக்கு அதிகமான சாரா உதவி வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, STR மற்றும் eKasih பயனாளிக் குடும்பங்கள் மாதம் RM200 சாரா உதவியைப் பெறுவார்கள். அதேவேளை, மூத்த குடிமக்களுக்கு மாதம் RM150 வழங்கப்படுவதுடன், தனிநபர்களுக்கு மாதம் RM100 வழங்கப்படும்.
சாரா உதவியைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்கு 15 வகையான அத்தியாவசியப் பொருட்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில் அரிசி, முட்டை, ரொட்டி, சமையல் எண்ணெய், மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரையின்றி வாங்கக்கூடிய மருந்துகள், உறையவைக்கப்பட்ட உணவுகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் பள்ளிக்குத் தேவையான பொருட்கள் உள்ளிட்ட 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான அத்தியாவசியப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 14,700க்கும் அதிகமான பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் சாரா உதவி தொகையைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கி கொள்ளலாம்.







