கோலாலம்பூர், அக். 23 – 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ், ரஹ்மா ரொக்க உதவித் திட்டம் (STR) மற்றும் ரஹ்மா அடிப்படை உதவித் திட்டம் (SARA) ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு RM16 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை குடும்பங்களின் வாங்கும் சக்தியைத் தக்கவைத்து, சில்லறை வர்த்தகத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவாக அமையும் என RHB முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது.
RHB முதலீட்டு வங்கியின் ஆய்வாளர்களான சூங் வெய் சியாங் மற்றும் ஐடில் பூஸி ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அரசாங்கத்தின் தொடர்ச்சியான நிதியுதவிகள், வரிச் சலுகைகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வுகள் ஆகியவை நாட்டின் நுகர்வுச் செலவினத்தை நிலைநிறுத்த உதவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடும்பங்களுக்கான உதவித்தொகையில் பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும், SARA திட்டத்திற்கு வழங்கப்படும் கூடுதல் முக்கியத்துவம், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான செலவினத்தை அதிகரிக்க உதவும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இத்திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் ஒருமுறை நிதியுதவியும் பொருட்களின் கொள்முதலுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வு, குடும்பங்களின் செலவிடக்கூடிய வருமானத்தை அதிகரித்து, நுகர்வோர் சந்தைக்கு கூடுதல் ஊக்கத்தை வழங்கும் என ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதன் மூலம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களை அதிகமாகச் சார்ந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மலிவு விலைப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அதிகப் பயனடையக்கூடும் என RHB தெரிவித்தது.

குறிப்பாக, 99SMART, ECOSHOP மற்றும் Mr DIY Group போன்ற சில்லறை வர்த்தக நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளால் பயனடையக்கூடும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், வாழ்க்கைச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நுகர்வோர் தங்களது செலவினங்களைத் தேர்ந்தெடுத்து மேற்கொள்ளும் போக்கு நீடிக்கலாம் என ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கும் மலிவு விலையில் கிடைக்கும் பொருட்களுக்கும் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





