நாடு முழுவதும் 691 ஆசிரியர்களுக்கு உடனடி உளவியல் ஆதரவு தேவை: கல்வி அமைச்சு

29 அக்டோபர் 2026, 2:00 PM
நாடு முழுவதும் 691 ஆசிரியர்களுக்கு உடனடி உளவியல் ஆதரவு தேவை: கல்வி அமைச்சு

ஷா ஆலாம், அக்.29 — நாடு முழுவதும் 82,126 ஆசிரியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட உளவியல் நலன் பரிசோதனையில், 691 ஆசிரியர்களுக்கு உடனடி உளவியல் ஆதரவு தேவைப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை உளவியல் நலன் குறியீட்டுப் பரிசோதனையான IKPsi-க்கு உட்படுத்தப்பட்ட மொத்த ஆசிரியர்களில் 0.84 விழுக்காடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரிசோதனையின் முடிவுகளின்படி, உதவி தேவைப்படும் 691 ஆசிரியர்களில் 636 பேர் மிதமான உளவியல் நலன் கொண்டவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 32 ஆசிரியர்கள் மிதமான குறைந்த உளவியல் நலன் பிரிவிலும், 23 ஆசிரியர்கள் குறைந்த உளவியல் நலன் பிரிவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபட்லினா சிடேக்

அதேவேளை, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர்களில் 99.16 விழுக்காட்டினர் நல்ல உளவியல் நலனைக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இவர்களில் 50,869 ஆசிரியர்கள் உயர் உளவியல் நலன் பிரிவிலும், 30,566 பேர் மிதமான உயர் உளவியல் நலன் பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்களிடையே நிலவும் மனநலப் பிரச்சனைகள் மற்றும் அவற்றைக் கையாள்வதற்குக் கல்வி அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஸ்லிமின் யாஹ்யா எழுப்பிய கேள்விக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் ஃபட்லினா இதனைத் தெரிவித்தார். அந்தப் பதில் நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

உளவியல் ஆதரவு தேவைப்படும் ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட மற்றும் குழு ஆலோசனைச் சேவைகள், உளவியல் மதிப்பீடுகள், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் உணர்வுகளைச் சீராக நிர்வகிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் என அமைச்சர் விளக்கமளித்தார்.

மேலும், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப நிதி நெருக்கடிகள், கடுமையான கடன் சுமைகள், பணித்திறன் தொடர்பான சிக்கல்கள் மற்றும் மனநலப் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கும் இந்தத் தலையீட்டுத் திட்டங்கள் மூலம் தீர்வு காணப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் ஓய்வறைகளை மேம்படுத்துவதற்காகக் கல்வி அமைச்சு மொத்தம் 20 கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. இதில் கூடுதலாக ஒதுக்கப்பட்ட 10 கோடி ரிங்கிட்டும் அடங்கும்.

ஆசிரியர்களுக்கு மிகவும் வசதியான, நல்ல பணிச்சூழலை உருவாக்குவதுடன், அவர்களின் உடல், உணர்வு மற்றும் உளவியல் நலனை மேம்படுத்துவதும் இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும் என ஃபட்லினா தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.