ஷா ஆலாம், அக். 13 – புகைமூட்டம் காரணமாக ஜோகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை, புதன்கிழமை மூடப்பட்டிருக்கும் எனக் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூரில் உலு லங்காட் மற்றும் சிப்பாங் மாவட்டக் கல்வி அலுவலகங்களின் (PPD) நிர்வாகத்தின்கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் இந்த மூடல் உத்தரவில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
பகாங்கில், குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் மாவட்டக் கல்வி அலுவலகங்களின் கீழ் உள்ள பள்ளிகள் மட்டுமே மூடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், சபாவில் தாவாவ் மாவட்டத்திலும், சரவாக்கில் செரியான், ஸ்ரீ அமான் மற்றும் லுபோக் அந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளும் நாளை செயல்படாது.
இதர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் ஃபட்லினா தெளிவுபடுத்தினார்.
இந்த விவரங்களை அவர் செவ்வாய்க்கிழமை தனது முகநூல் பதிவின் வாயிலாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் காலகட்டத்தில் மாணவர்களுக்கான கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகள் வீட்டிலிருந்தே மேற்கொள்ளப்படும் (PdPR) என்றும் அவர் கூறினார்.
ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆதரவுப் பணியாளர்கள் (AKP) வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கும் (BDR) அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.







