ஜப்பான் விமான நிலையத்தில் 5 மலேசியர்கள் RM3.1 மில்லியன் போதைப் பொருளுடன் கைது

13 அக்டோபர் 2026, 3:30 AM
ஜப்பான் விமான நிலையத்தில் 5 மலேசியர்கள் RM3.1 மில்லியன் போதைப் பொருளுடன் கைது

ஷா ஆலாம், அக். 13 – ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா சர்வதேச விமான நிலையத்தில், காலணிகளின் அடிப்பகுதியில் மறைத்து சுமார் ஐந்து கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற ஐந்து மலேசியர்கள் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நான்கு ஆண்கள், ஒரு பெண் சம்பந்தப்பட்ட இந்த சம்பவத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 120 மில்லியன் ஜப்பானிய யென், அதாவது மலேசிய மதிப்பில் சுமார் RM3.1 மில்லியனாகும்.

இந்த ஐந்து பேரும் மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து (KLIA), ஜப்பானுக்குப் போதைப்பொருளைக் கடத்திச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

Fuji News Network (FNN) வெளியிட்டுள்ள செய்தியின்படி, சந்தேக நபர்களில் ஒருவர் அணிந்திருந்த காலணியின் அடிப்பகுதி வழக்கத்திற்கு மாறாக மிகவும் தடிமனாக இருந்ததைக் கவனித்த ஜப்பான் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சோதனையில் இரண்டு சந்தேக நபர்கள் அணிந்திருந்த காலணிகளின் உள்பகுதி அடிப்பாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த இருவருடன் இணைந்து பயணம் செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டனர்.

Tokyo Reporter, Nippon News Network (NNN) செய்தியை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த மூவரும் இதே முறையில் தங்களது காலணிகளுக்குள் கொக்கைன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு சந்தேக நபரும் சுமார் ஒரு கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாகத் TBS News DIG தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், சந்தேக நபர்களில் ஒருவர், வெளிநாட்டுக்குப் போதைப்பொருளைக் கொண்டு செல்வதற்காகத் தமக்கு ஆளுக்கு RM8,000 ஊதியம் வழங்குவதாகக் கூறி ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

டெலிகிராம் (Telegram) செயலி வாயிலாகத் தமக்கு இந்த வேலைக்கான வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், போதைப்பொருளை மறைத்து எடுத்துச் செல்வதற்காக ஒரு ஜோடி காலணிகள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்கிடையில், விசாரணையின்போது நான்கு சந்தேக நபர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

எனினும், கைது செய்யப்பட்ட 25 வயதுடைய பெண் ஒருவர் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தாம் எடுத்துச் சென்ற பொட்டலத்தில் கொக்கைன் போதைப்பொருள் இருப்பது தமக்குத் தெரியாது என அவர் கூறியுள்ளார்.

மலேசியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் குற்றக் கும்பல் ஒன்று, சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்துவதற்காக இந்த ஐந்து பேரையும் பணியமர்த்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

சந்தேக நபர்கள் எவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர், போதைப்பொருள் அவர்களிடம் எவ்வாறு ஒப்படைக்கப்பட்டது, இந்தக் கடத்தல் நடவடிக்கையின் பின்னணியில் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் யார் என்பது குறித்து ஜப்பானிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.